தேனிலவுக் கொலை! சோனம் ரகுவன்ஷிக்கு ஜாமீன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு பற்றி..
தேனிலவுக் கொண்டாட அழைத்துச் சென்ற கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, சோனம் ரகுவன்ஷி ஏற்கெனவே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விசாரணை நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளுக்கு இணங்க தற்போது ஷில்லாங்கில் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
கடந்தாண்டு மே மாதம் சோஹ்ரா பகுதியில் கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சோனமுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி மேகாலயா அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது.
Advertisement
Advertisement
மேகாலயா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் ராகு ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வின் முன் புதன்கிழமை மாலை மனுவைத் தாக்கல் செய்தார். சோனம் தலைமறைவாகக்கூடும் என வாதிட்ட அவர், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சோனம் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை அதிகாரிகள் முழுமையாகத் தெரிவிக்கத் தவறியதாகக் கூறப்பட்டதன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக மேத்தா குறிப்பிட்டார். ஆனால், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவைக் குறிப்பிடுவதில் ஏற்பட்ட "சிறிய எழுத்துப் பிழை" மட்டுமே இது என்றும், ஜாமீன் வழங்குவதை நியாயப்படுத்த அது போதுமானதல்ல என்றும் அவர் வாதிட்டார்.
முன்னதாக திங்களன்று, சோனமின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மாநில அரசு தாக்கல் செய்த மனுவை மேகாலயா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யக்கோரி மேகாலயா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
பின்னணி என்ன?
கடந்த ஆண்டு மே 23 அன்று மேகாலயாவின் சோஹ்ரா பகுதியில் சுற்றுலா சென்றிருந்தபோது அந்தத் தம்பதியினர் காணாமல் போயினர். அதன்பின்னர், ஜூன் 2 அன்று ராஜா ரகுவன்ஷியின் உடல் பள்ளத்தாக்கு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. பண ஆதாயத்திற்காக கூலிப்படையினர் மூலம் தனது கணவரைத் தீர்த்துக்கட்ட சோனம் ரகுவன்ஷி சதி செய்ததாக காவல்துறை குற்றம் சாட்டியதையடுத்து, சோனம் ரகுவன்ஷி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சோனம் ரகுவன்ஷியின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாக மேகாலயா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி மே 4 அன்று உயர் நீதிமன்றத்தில் அதற்கான ஆதார ஆவணங்களைச் சமர்ப்பித்தது. சோனம் ரகுவன்ஷியின் தூண்டுதலின் பேரில் கூலிப்படையை ஏவி தேனிலவுப் பயணத்தின்போது ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டதாகவும் அரசுத் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Supreme Court on Friday refused to stay bail granted to Sonam Raghuvanshi in the Raja Raghuvanshi murder case.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.