முகப்பு
இந்தியா

உபா சட்டத்தில் கைதானவருக்கு ஜாமீன்! உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்காததை விமர்சித்த உச்ச நீதிமன்றம்!

உபா சட்டத்தில் கைதானவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது பற்றி...

உச்ச நீதிமன்றம் | உமர் காலித் - கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலில் ஈடுபட்டதாக உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, ஹண்ட்வாராவைச் சேர்ந்த சையத் இஃப்திகார் அன்ட்ராஃப் என்பவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலில் ஈடுபட்டதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) என்ஐஏ கைது செய்தது.

உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட சையத் இஃப்திகார், கடந்த 6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, இன்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உபா பிரிவு 43டி(5) ன்படி, காலவரையறையின்றி ஒருவரை சிறைக்காவலில் வைப்பதை நியாயப்படுத்த இயலாது என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 மற்றும் 22-க்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், சையத் இஃப்திகாருக்கு ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டனர்.

மேலும், ஒரு வாரத்துக்குள் அவரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்கவும், அவரது கடவுச்சீட்டை திருப்பி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், 15 நாள்களுக்கு ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட சையத் இஃப்திகாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உமர் காலித் வழக்கு நீதிபதிகள் மீது விமர்சனம்

இந்த வழக்கு விசாரணையின்போது, தில்லி கலவர வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்காத உச்ச நீதிமன்ற அமர்வு, குல்ஃபிஷா ஃபாத்திமா வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டதை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு விமர்சித்தது.

விசாரணையில் ஏற்படும் நீண்ட கால தாமதம் ஜாமீன் வழக்குவதற்கான ஒரு காரணமாக அங்கீகரித்த கே.ஏ. நஜீப் வழக்கில் மூன்று நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உமர் காலித் வழக்கை விசாரித்த அமர்வு முறையாகப் பின்பற்றவில்லை எனக் குறிப்பிட்டனர்.

கே.ஏ. நஜீப் வழக்கின் தீர்ப்பை விசாரணை நீதிமன்றங்களோ, உயர் நீதிமன்றங்களோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் குறைந்த நீதிபதிகள் (மூன்று நீதிபதிகள் அமர்வுகளுக்கு குறைவான) கொண்ட அமர்வுகளோகூட நீர்த்துப்போகச் செய்யவோ, தவிர்த்துச் செல்லவோ அல்லது புறக்கணிக்கவோ இயலாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

’பிணையே விதி, சிறையே விதிவிலக்கு’ என்பது அரசியலமைப்பின் 21 மற்றும் 22-வது பிரிவுகளில் இருந்து உருவான கோட்பாடாகும். உபா சட்டத்தில் கைதானவர்களுக்கும் பிணையே விதி, சிறையே விதிவிலக்கு எனக் கூறுவதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், நிச்சயமாக, குறிப்பிட்ட சில வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பிணை மறுக்கப்படலாம் எனத் தெரிவித்தனர்.

மேலும், நாடு முழுவதும் உபா சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களில் 2 முதல் 6 சதவிகிதம் பேர் வரை மட்டுமே தண்டனை பெறுகிறார்கள். அதாவது 94% முதல் 98% பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை இந்த சட்டத்தின் கீழ் தண்டனை பெறுபவர்கள் விதிதம் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவே என்ற நிலைதான் உள்ளது என்று புள்ளி விவரங்களை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.