நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!
நீதித் துறையில் செய்யறிவு பயன்பாட்டுக்கான வரைவு விதிகள் வெளியிட்டிருப்பது பற்றி...
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை நெறிமுறைப்படுத்தும் வரைவு விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
செய்யறிவைப் பயன்படுத்துவதற்கான வரைவு ஒழுங்குமுறைகள் - 2026 -ஐ உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதில், செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் வழக்கறிஞர்கள் மனுக்கள் மற்றும் வாதங்களைத் தயாரிக்கலாம், ஆனால், செய்யறிவு மூலம் தயாரிக்கப்பட்டால், அதனை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், செய்யறிவு மூலம் சட்டம் தொடர்பான ஆராய்ச்சி, வரைவு செய்தல், மொழிபெயர்ப்பு, வழக்கு மேலாண்மை உள்ளிட்டவை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டம் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு மட்டுமே இருப்பதாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
செய்யறிவை பயன்படுத்தி தவறு நடக்கும் பட்சத்தில் அதற்கு வழக்கறிஞர்களே முழுப் பொறுப்பு என்றும், செய்யறிவை காரணம் காட்டி தப்பிக்க இயலாது. தவறு நடக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நெறிமுறைகள், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் சட்ட ஆணையங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்று வரைவு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றங்களில் செய்யறிவைப் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஜூன் 20 வரை கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் செய்யறிவைப் பயன்படுத்தலாம்?
சட்ட ஆராய்ச்சி
தீர்ப்புகள் மற்றும் ஆவணங்களைச் சுருக்க
தீர்ப்புகள், உத்தரவுகள் மொழிப்பெயர்ப்பு
பரிந்துரைக்கப்பட்ட வடிவங்களை உருவாக்குதல்
அறிவிப்புகள், அழைப்பாணைகள் மற்றும் நிர்வாக ஆவணங்களை தயாரித்தல்
வழக்குப் பட்டியல் தயாரித்தல் மற்றும் விசாரணை அட்டவணைப்படுத்துதல்
எதற்கெல்லாம் செய்யறிவைப் பயன்படுத்த முடியாது?
வழக்குகள் அல்லது நீதித்துறை முடிவுகளைத் தீர்மானித்தல்
தண்டனைகளை வழங்குதல்
பிணைக்கான தகுதியைத் தீர்மானித்தல்
சாட்சியின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்தல்
வழக்குத் தொடுப்பவர்கள், சாட்சிகள், வழக்கறிஞர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் எதிர்கால நடத்தையைக் கணித்தல்
நீதிமன்ற ஆலோசனைகளில் தலையிடுதல்
தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும் விஷயங்கள்
Artificial Intelligence in the Judiciary: Supreme Court Releases draft regulations
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.