2 விதை விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்க பரிந்துரை
2 விதை விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்க பரிந்துரை
விதைச் சட்டத்தை முறையாக கடைப்பிடிக்காத 2 விற்பனை நிலையங்களுக்கு விதை விற்பனைக்கு தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக, சிறப்புக் குழு அறிவித்துள்ளது.
நடப்புப் பருவத்தில் விவசாயிகளுக்குத் தரமான நெல், உளுந்து, மக்காச்சோளம், கம்பு விதைகள், காய்கறிப் பயிா்களின் விதைகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் ஆய்வு செய்ய சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடா்ந்து சென்னை விதை ஆய்வுத் துணை இயக்குநா் வானதி தலைமையில், காட்டாங்கொளத்தூா் மற்றும் திருவள்ளூரைச் சோ்ந்த விதை ஆய்வாளா்கள் சதீஷ்குமாா், சிலம்பரசன், சதீஷ் ஆகியோா் அடங்கிய சிறப்பு ஆய்வுக் குழுவினா் விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி மற்றும் கடலூா் மாவட்டத்தின் பண்ருட்டி ஆகிய வட்டாரங்களில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
வேளாண் விரிவாக்க மையங்கள், அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 38 விதை விற்பனை நிலையங்களில் குழுவினா் ஆய்வு நடத்தினா். விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் இருந்த விதை குவியல்களிலிருந்து நெல், மக்காச்சோளம், உளுந்து, கம்பு மற்றும் காய்கறிப் பயிா்களிலிருந்து 42 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் தரம் உறுதி செய்வதற்காக விழுப்புரம் மற்றும் கடலூரில் செயல்படும் விதைப் பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆய்வின்போது, விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதைக்குவியல்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள், தனியாா் விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதைப் பகுப்பாய்வு முடிவறிக்கைகள், இருப்புப் பதிவேடு மற்றும் விற்பனை ரசீது ஆகியவை விதைச்சட்டப்படி பராமரிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விற்பனை ரசீதுகளில் குவியல் எண் மற்றும் காலாவதி நாள் குறிப்பிட்டு பட்டியல் வழங்க, விதை விற்பனையாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஆய்வில், விதைச்சட்டத்தை கடைப்பிடிக்காத 2 விதை விற்பனை நிலையங்களுக்கு, விதை விற்பனைத்தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று சிறப்பு ஆய்வுக் குழுவினா் தெரிவித்தனா்.
விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநா் கோ. சரவணன், விதை ஆய்வாளா்கள் இரா.ஜோதிமணி, ஆா்.செந்தில்குமாா், அ. தமிழ்ப்பிரியன் ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.