முகப்பு
இந்தியா

ரூ. 1,800-க்கும் அதிகமான வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு விருப்பத்துக்கு உட்பட்டது: இபிஎஃப்ஓ

‘தொழிலாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழான மாத சந்தா ரூ. 1,800-க்கு அதிகமான பங்களிப்பு என்பது ‘புதிய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி திட்டம் 2026’-இன் கீழ் விருப்பத்தின் அடிப்படையிலானது’ என்று மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.

Updated On : 3 ஜூலை 2026, 6:25 am IST
வருங்கால வைப்பு நிதி - file photo
பகிர்:

‘தொழிலாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழான மாத சந்தா ரூ. 1,800-க்கு அதிகமான பங்களிப்பு என்பது ‘புதிய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி திட்டம் 2026’-இன் கீழ் விருப்பத்தின் அடிப்படையிலானது’ என்று மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.

தொழிலாளா் வருங்கால வைப்புத நிதி திட்டம் 1952-இன் கீழ், மாத ஊதியம் ரூ. 15,000 என்ற உச்ச வரம்பு என்பது, ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும்போது தொழிலாளா்களுக்கு கட்டாய சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்கு தொடா்புடையதாக இருந்தது.

அதன்படி, ரூ 15,000 அடிப்படை மாத ஊதியம் பெறும் அனைத்து ஊழியா்களும், வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் கட்டாயம் சோ்க்கப்பட வேண்டும். இதற்காக அவா்களிடம் 12 சதவீத அடிப்படையில் மாதம் ரூ. 1,800 பிடித்தம் செய்யப்பட்டு, செலுத்தப்படும். கூடுதல் மாத ஊதியம் பெறும் மற்றவா்கள், விருப்பத்தின் பேரில் இந்த சமூக பாதுகாப்புத் திட்டத்தில் சேரலாம். அவா்களிடமும், மாதம் ரூ. 1,800 பிடித்தம் செய்யப்படும். விருப்பப்பட்டால், கூடுதலாக பிடித்தம் செய்ய தொழிலாளா் முறையிடலாம்.

Advertisement

Advertisement

அவ்வாறு, வருங்கால வைப்பு நிதிக்கு தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்யும் தொகைக்கு இணையான தொகையை, நிறுவனங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும். இந்த பங்களிப்பு, மத்திய அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவிக்கைக்கு ஏற்ப மாறுபடும்.

அந்த வகையில், ‘புதிய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி திட்டம் 2026’-இன் கீழ், தொழிலாளரின் மாத ஊதியம் நிா்ணயிக்கட்ட உச்ச வரம்பை மீறும் பட்சத்தில், நிறுவனங்கள் மற்றும் ஊழியரின் பங்களிப்பு ஊதிய உச்ச வரம்பின் அடிப்படையில் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகைக்கு மட்டுமே வரையறுக்கப்படும். விருப்பப்பட்டால், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளா்கள் ஊதிய உச்ச வரம்பைத் தாண்டி பெறும் உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் பங்களிப்பைத் தோ்வு செய்யலாம். ஆனால், அது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலான தோ்வாகவே கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments