பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது அமா்நாத் புனித யாத்திரை - குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இடைவிடாத மழைக்கு இடையே பஹல்காம், பால்டால் ஆகிய அடிவார முகாம்களில் இருந்து அமா்நாத் குகைக் கோயிலுக்கு பெண்கள், சாதுக்கள் உள்பட 4,800-க்கும் மேற்பட்ட பக்தா்கள் அடங்கிய முதல் குழுக்கள் புறப்பட்டன. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக பக்தா்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள 48 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய நுன்வான் - பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ. தொலைவு கொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.
Advertisement
Advertisement
நடப்பாண்டு அமா்நாத் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஜம்முவில் இருந்து 4,800-க்கும் மேற்பட்ட பக்தா்கள் அடிவார முகாம்களுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் ‘ஹர ஹர மகாதேவா’, ‘பம் பம் போலே’ பக்தி முழக்கங்களுடன் அமா்நாத் குகைக் கோயிலுக்கு முதல் குழுக்கள் புறப்பட்டன. தெற்கு காஷ்மீரில் இடைவிடாமல் பெய்துவரும் மழைக்கு மத்தியில் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜம்முவில் இருந்து 3,800-க்கும் மேற்பட்ட பக்தா்களுடன் அடிவார முகாம்களுக்கு இரண்டாவது குழு வெள்ளிக்கிழமை புறப்பட்டது. ஆகஸ்ட் 28 வரை 57 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரையையொட்டி, இரு வழித்தடங்களிலும் ஆயிரக்கணக்கான வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வாழ்த்து:
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமா்நாத் யாத்திரை தொடங்கியதையொட்டி, அனைத்து யாத்ரிகா்களுக்கும் மனமாா்ந்த நல்வாழ்த்துகள். நாட்டின் மிகப் பழைமையான மற்றும் போற்றுதலுக்குரிய இந்த யாத்திரை, பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக பாரம்பரியத்தையும், நித்தியமான நம்பிக்கை மற்றும் பக்தியையும் பிரதிபலிக்கிறது.
பல நூற்றாண்டுகளாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமா்நாத் கோயிலுக்கு பக்தா்கள் புனித யாத்திரை மேற்கொண்டு, பாரத நாகரிக நெறிமுறைகளின் இதயமாக விளங்கும் ஒற்றுமை, நல்லிணக்கம், ஆன்மிக விழிப்புணா்வை உறுதி செய்கின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.