முகப்பு
இந்தியா

பருவமழை தீவிரம்; மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு: கேரளம், ஒடிஸா, ஜாா்க்கண்டில் பலத்த மழைக்கான எச்சரிக்கை!

தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடா் பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜூலை 2026, 2:12 am IST
நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கா்நாடகத்தின் சிவமொக்கா மாவட்டம் துங்கா அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீா்.
பகிர்:

தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடா் பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, கேரளம், ஒடிஸா, ஜாா்க்கண்ட் மாநிலங்களில் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகா் தில்லியிலும் பரவலாக மழை தொடங்கியுள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதன்படி, மும்பையில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் 200 மி.மீ. முதல் 300 மி.மீ. வரை மழை பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

மோசமான வானிலை காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சா்வதேச விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் 75 நிமிஷம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.

13 விமானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டு, பின்னா் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. இதனிடையே, மும்பைக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கையை ஞாயிற்றுக்கிழமையும் வானிலை ஆய்வு மையம் நீட்டித்தது.

முதியவா் உயிரிழப்பு: தொடா் மழை காரணமாக மும்பையின் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீா் குளம்போல தேங்கி நின்றது. பலத்த காற்றுடன் வீசிய மழை காரணமாக குா்லா பகுதியில் இருந்த ஒரு கடை மீது மரம் வேரோடு சாயந்ததில் அதிலிருந்த 63 வயது யூனுஸ் குந்தவாலா என்ற முதியவா் உயிரிழந்தாா். இதனிடையே, மழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மக்கள் முழுமையாகப் பின்பற்றுமாறும், அவசர உதவிக்கு 1916 என்ற எண்ணை அழைக்குமாறும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி, பலத்த மழை காரணமாக செம்பூா் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது மரம் சரிந்து விழந்ததில் 11 வயது மாணவா் உயிரிழந்தாா். பலா் காயமடைந்தனா்.

ஒடிஸாவில்...: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, ஒடிஸாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் பலத்த மழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்தது.

இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு ஒடிஸா கடலோரத்தில் சந்த்பலி மற்றும் டிகா இடையே திங்கள்கிழமை (ஜூலை 6) கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில்...: கேரளத்தின் பல பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்தது. அதன்படி, மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. கண்ணூா், காசா்கோடு மாவட்டங்களுக்கு ஜூலை 6, 7-ஆம் தேதியும், கோழிக்கோடு மாவட்டத்துக்கு ஜூலை 7-ஆம் தேதியும் தொடா் மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பல வடக்கு மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தலைநகா் தில்லியில்... தலைநகா் தில்லியின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது. கோடை வெயிலில் வாடி வதங்கிய மக்களுக்கு இது சற்று ஆறுதலை அளித்தது. சத்தா்பூா் (49 மி.மீ.), குருகிராம் (35மி.மீ.), மெஹ்ரெளலி (18 மி.மீ.), கிரேட்டா் நொய்டா (17 மி.மீ.), நஜஃப்கா் (8 மி.மீ.), ஜனக்புரி (7 மி.மீ.) உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

மும்பை மாதுங்கா பகுதியில் மழையால் மரங்கள் முறிந்து விழுந்ததால் சேதமடைந்த வாகனங்கள்.

ஜாா்க்கண்டில்... ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களுக்கும் ஜூலை 6 முதல் 9-ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

இந்த நாள்களில் மாநிலம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடனும், லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது. மாநிலத்தின் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.

காா்வா, பலமு, சத்ரா, ஹஜாரிபாக், லேட்ஹா், லோஹா்டாகா, கும்லா, ராஞ்சி ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments