முகப்பு
இந்தியா

கரூர் சம்பவம்: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான திமுக மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருக்கு எதிராக திமுகவை சேர்ந்த ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

Updated On : 8 ஜூலை 2026, 4:31 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருக்கு எதிராக திமுகவை சேர்ந்த ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதைத் தொடர்ந்து மனு திரும்பப் பெறப்பட்டது.

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி ஜூலை 3-ஆம் தேதி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன், அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதிடுகையில், கரூர் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை அல்லது கதையாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, இழப்பீடு அளிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவர்கள் முயல்கின்றனர். கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை உச்சநீதிமன்றம் தடை செய்திருந்தபோதிலும், அவர்கள் (ஆளும் அரசில் உள்ளவர்கள்) அத்தகைய கருத்துகளை வெளியிடுகிறார்கள் என்றார்.

Advertisement

Advertisement

அதற்கு நீதிபதிகள், இதுபோன்ற அரசியல் ரீதியான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டுமா? என்று மனுதாரரின் வழக்குரைஞரிடம் வினவினர். மேலும், "இது நன்கு சிந்தித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவா? இதன் விளைவு என்ன? சற்று யோசியுங்கள். பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் முதல்வர் குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவ்வாறிருக்க உங்கள் சண்டையை வெளியே நடத்துவதற்குப் பதிலாக, நீதிமன்றத்தை ஓர் அரசியல் களமாக மாற்றுகிறீர்களே' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன், "இந்த மனுவை, நீங்கள் இங்கு வலியுறுத்தாமல் இருப்பதே சிறந்தது. முதல்வரின் பயணத்தை உச்சநீதிமன்றம் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து ஆர். எஸ்.பாரதி தரப்பு வழக்குரைஞர், "மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்' என்று கூறினார். இதையடுத்து, "மனு திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்படுகிறது' என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், கரூரில் 2025, செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆரம்பத்தில் மாநில காவல் துறை விசாரணை நடத்திய இந்த வழக்கை, பிறகு தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், நீதிபதி அஜய் ரஸ்தோகி (ஓய்வு) தலைமையிலான மேற்பார்வைக் குழுவின் கண்காணிப்புக்கு உட்பட்டு சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பதவியேற்ற பிறகு, கரூர் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பிற அமைச்சர்கள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கும் வகையில், முதல்வர் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூருக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஆர்.எஸ். பாரதி, "கரூர் சம்பவத்தில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரடியாகக் குற்றஞ்சாட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பொதுவெளியில் பேசத் தடை விதிக்க வேண்டும்; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் சந்திக்க முற்படுவது விசாரணை நடைமுறையின் நேர்மை மற்றும் சுதந்திரத்தன்மை குறித்த ஒருவித ஐயப்பாட்டை உருவாக்கும்' என்று முறையிட்டிருந்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்

கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சாட்சிகளைக் கலைக்கும் விதமாகவும், விசாரணையில் குறுக்கிடும் வகையிலும் செயல்பட்டு வருவதாக சிபிஐயிடம் திமுக புகார் அளித்துள்ளது.

இது குறித்து சிபிஐ இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள புகார்: கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியது, அந்த வழக்கின் சாட்சிகளைக் கலைக்கும் விதத்திலும், சிபிஐ மற்றும் உச்சநீதிமன்றம் நியமித்த மேற்பார்வைக் குழுவின் விசாரணையில் குறுக்கீடும் வகையிலும் அமைந்துள்ளது.

இதுதொடர்பாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும், பணி நியமன ஆணைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிகழ்வுகள் முழுவதையும் சிபிஐ கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments