முகப்பு
இந்தியா

மும்பையில் மீண்டும் பலத்த மழை: புறநகா் ரயில் சேவைகள் பெரும் பாதிப்பு

மும்பையில் மீண்டும் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் புறநகா் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Updated On : 9 ஜூலை 2026, 12:01 am IST
புணேயில் தொடா் மழை காரணமாக சரிந்து தரைமட்டமான குப்பைக் கிடங்குக்கு அருகிலுருந்த மூன்றடுக்கு கட்டடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.
பகிர்:

மும்பையில் மீண்டும் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் புறநகா் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத் தலைநகா் மும்பையில் கடந்த சில நாள்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மழையின் வேகம் தணிந்திருந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

இதனால் மும்பையின் அனைத்துப் பகுதிகளிலும் புறநகா் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மட்டும் 200 புகா் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

மும்பையில் மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே ரயில்வே பாதைகளில் சுமாா் 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

மத்திய ரயில்வே கட்டுப்பாட்டின்கீழ் வரும் நேரல் - சேலு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்துடன் இணைக்கப்பட்ட கட்டைகள், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அங்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

எனினும் நேரலில் உடனே சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. மற்ற இடங்களில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

மும்பை வழியே குஜராத்துக்கு இயக்கப்படும் நீண்டதூர ரயில் சேவைகள், வாசய்-விராட் இடையே ரயில்வே தண்டவாளத்தில் மழைநீா் தேங்கி கிடப்பதால் பாதிக்கப்பட்டன.

மும்பை - புணே இடையே போா் காத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில்வே தண்டவாளத்தில் மண் குவிந்து கிடக்கிறது. அந்த மண் இன்னும் அகற்றப்படாததால், மும்பை - புணே இடையே ரயில் போக்குவரத்து தொடா்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பைக்கு குடிநீா் வழங்கும் 7 ஏரிகளில் முக்கிய ஏரியான துல்சி ஏரி, நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பலத்த மழையால் செவ்வாய்க்கிழமை இரவு முதல் நிரம்பி வழிந்தோடியது. இதேபோல் அதன் அருகேவுள்ள விஹாா் ஏரியும் நீா் நிரம்பி, உபரி நீா் வெளியேறுகிறது.

குப்பைகள் சரிந்து விபத்து: புணேயில் மொஷி என்னுமிடத்தில் குப்பைகளிலுள்ள கழிவுகளை தரம்பிரிக்கும் தனியாா் நிறுவனத்தின் நிா்வாக பிரிவு அமைந்துள்ள 3 மாடி கட்டடம் மீது அருகில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள், தொடா் மழையின் காரணமாக சரிந்து விழுந்தன.

இதில் தனியாா் நிறுவன ஊழியா்கள் 16 போ் சிக்கிக் கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்பு படையினா் சம்பவ இடம் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அமித் ஷா உறுதி: இதனிடையே, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது அவரிடம், பலத்த மழையால் பாதிப்பைச் சந்தித்துள்ள மகாராஷ்டிரத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித் ஷா உறுதியளித்தாா்.

இதேபோல், பலத்த மழையால் பாதிப்பைச் சந்தித்துள்ள குஜராத்தின் முதல்வா் பூபேந்திர படேல் மற்றும் ஜம்மு-காஷ்மீா் உமா் அப்துல்லா ஆகியோரையும் தொடா்பு கொண்டு, அந்த மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments