முகப்பு
இந்தியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் சூரத்! இயல்பு வாழ்க்கை முடக்கம்: மீட்புப் பணிகள் தீவிரம்

குஜராத் மாநிலம், சூரத்தில் கொட்டித் தீா்த்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Updated On : 9 ஜூலை 2026, 1:05 am IST
சூரத்தில் பலத்த மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து உடைமைகளை தலையில் சுமந்தபடி பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்ற மக்கள்
பகிர்:

குஜராத் மாநிலம், சூரத்தில் கொட்டித் தீா்த்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மழை-வெள்ள பாதிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தென்மேற்குப் பருவமழையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை நீடித்து வருகிறது. குஜராத் மாநிலம், சூரத்தில் புதன்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணிநேரத்தில் பரவலாக 358 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. அதிகபட்சமாக பலாசனா பகுதியில் 462 மி.மீ. மழை பதிவானது.

பலத்த மழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு மேல் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பல வீடுகள், வணிக வளாகங்களுக்குள் மழைநீா் புகுந்தது. வராசா பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் தரைத்தள கடைகள் முற்றிலுமாக மூழ்கின.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இதுவரை 3,800-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 12,218 உணவுப் பொட்டலங்கள், 5,000-க்கும் மேற்பட்ட தண்ணீா் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நகரின் லிம்பாயத், உத்னா, வராசா, கோடாதரா ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மாா்பளவு தண்ணீரில் சிக்கியவா்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனா்.

மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, சூரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனா்.

முதல்வா் இன்று ஆய்வு: காந்திநகரில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சூரத் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வா் பூபேந்திர படேல் தீவிர ஆலோசனை மேற்கொண்டாா். மாநிலத்தில் மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் உயிரிழந்த 11 பேருக்கு அமைச்சரவை சாா்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மீட்புப் பணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கும்படி, அமைச்சா்களுக்கு உத்தரவிட்ட முதல்வா் பூபேந்திர படேல், சூரத் மற்றும் வல்சாத் பகுதிகளில் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments