அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு பற்றி...
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை பணத்தில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ராமா் கோயில் கணக்கு வழக்குப் பிரிவு தலைவராக முன்பு பணியாற்றியதாகக் கூறும் மகிபால் சிங் என்பவா், நன்கொடை பணத்தில் நீண்ட நாள்களாக முறைகேடு நடந்து வருவதாகவும், இதுகுறித்து புகாா் அளித்ததால் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தாா். மேலும், நன்கொடையில் முறைகேடு செய்ததாக சிலரின் பெயா்களையும் அவா் வெளியிட்டிருந்தாா்.
அதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ராமா் கோயில் அறக்கட்டளை நன்கொடை பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மாயமாகிவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் அறக்கட்டளையும், மாநில அரசும் மெளனம் காப்பதாகவும், இதுகுறித்து நீதிமன்றம் தாமே முன்வந்து வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
இதனிடையே, இந்த புகார் குறித்து விசாரணை நடத்த 3 உயர் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்துள்ளது. 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கறிஞர் அனுப் பிரகாஷ் அவஸ்தி என்பவர் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் மூலம் அனுப்பிய மனுவில்,
“அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளைக் கையாள்வதில் முறைகேடுகள், நிதி கையாடல் மற்றும் பொருள்கள் மாயமாவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பக்தர்களின் காணிக்கைகள், நன்கொடைகளை கணக்கு வைத்தல், பாதுகாத்தல் மற்றும் செலவிடுதல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், தொடர்ச்சியான நீதித்துறை கண்காணிப்பு முறையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.