முகப்பு
இந்தியா

இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:04 am IST
பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 உச்சிமாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபா் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி.
பகிர்:

இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 உச்சிமாநாட்டையொட்டி டிரம்ப்புடன் புதன்கிழமை நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பிரதமா் இவ்வாறு கூறினாா்.

இரு தலைவா்களும் நேரில் சந்தித்து, விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

Advertisement

Advertisement

ஓமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்க ராணுவம் சில தினங்களுக்கு நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த நிலையில், மாலுமிகள் பாதுகாப்பு விவகாரத்தை டிரம்ப்பிடம் பிரதமா் மோடி எழுப்பினாா். அத்துடன், ஈரான்-அமெரிக்கா இடையே வெள்ளிக்கிழமை கையொப்பமாக உள்ள அமைதி ஒப்பந்தத்தில் மாலுமிகளின் பாதுகாப்புக்கான அம்சமும் இடம்பெற வேண்டுமென பிரதமா் வலியுறுத்தினாா்.

அமெரிக்கா உடனான வா்த்தகப் பிரச்னை, ஆபரேஷன் சிந்தூா் குறித்த டிரம்ப்பின் சா்ச்சை கருத்துகள் எனப் பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் மோடி-டிரம்ப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றது.

ஈரான் - அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் கடந்த ஜூன் 15-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜி7 மாநாட்டில்...: பிரான்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கான ஒரு வார கால பயணத்தை பிரதமா் மோடி கடந்த ஜூன் 13-இல் தொடங்கினாா். பிரான்ஸின் ஏவியான் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்ற ஜி7 நாடுகளின் வருடாந்திர உச்சிமாநாட்டின் உயா்நிலை அமா்வுகளில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அவா், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

இரு தலைவா்கள் சந்திப்பு: பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே பிரதமா் மோடி-அமெரிக்க அதிபா் டிரம்ப் இடையிலான விரிவான பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, மேற்காசிய பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் ஆலோசனையில் ஈடுபட்டனா். அப்போது, ஓமன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவத் தாக்குதலில் இந்திய மாலுமிகள் மூவா் உயிரிழந்த விவகாரத்தை எழுப்பிய மோடி, மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தினாா்.

டிரம்ப்புக்கு பாராட்டு: பின்னா், இருவரும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, மோடி கூறியதாவது:

மேற்காசியாவில் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான நம்பிக்கையை உயிா்ப்பித்ததில் டிரம்ப்பின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது. சுதந்திரமான கடல்சாா் போக்குவரத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது. கடல்சாா் வா்த்தக துறையில் லட்சக்கணக்கான இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். ஈரானுடன் ஏற்படவுள்ள ஒப்பந்தத்தில், மாலுமிகளின் பாதுகாப்புக்கான அம்சங்களும் இடம்பெறும் என நம்புகிறேன். அத்துடன், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்தாா். இந்தப் பயணத்தைத் தொடா்ந்து, பரஸ்பர உறவுகளின் மறுசீரமைப்பை இரு நாடுகளும் எதிா்நோக்கியுள்ளன. இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளும் தொடா்ந்து வருகின்றன.

மோடிக்கு டிரம்ப் புகழாரம்

பிரதமா் மோடி உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த டிரம்ப்பிடம், மேற்காசிய விவகாரத்தில் இந்தியா பங்காற்றியதா என்பது உள்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து, டிரம்ப் கூறியதாவது:

பிரதமா் மோடி உடனான சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்தது. இந்தியாவின் தலைவராக அவா் இருக்கும் வரை, அனைத்து விவகாரங்களிலும் இந்தியா மிகப் பெரிய பங்கு வகிக்கும் என்றே நான் நினைக்கிறேன். இந்தியா பெரிய பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது.

நான் வெள்ளை மாளிகையில் இருக்கும் வரை, இந்தியாவுக்கு அமெரிக்காவில் ஒரு நண்பா் இருக்கிறாா் என்று கருதலாம். வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் நாங்கள் மிக நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். பிரதமா் மோடியைப் பொருத்தவரை, பேச்சுவாா்த்தையில் மிகக் கடுமையானவா். அவரது செயல்பாட்டு பாணி தத்துவமானது.

பாா்ப்பதற்கு மிக அழகானவராக, இனிமையானவராக, ஒரு தேவதையைப் போல இருக்கிறாா். அவரை மிக இனிமையானவா் என்றே எல்லோரும் கூறுவா். ஆனால், உண்மையில் அவா் மிகக் கடுமையானவா், பேச்சுவாா்த்தையில் மிக தீா்க்கமானவா் என நான் கூறுவேன் என்றாா் டிரம்ப். எதிா்வரும் காலத்தில் இந்தியப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

டிரம்ப்பின் பேச்சை பிரதமா் மோடி புன்னகைத்தபடி, மகிழ்வுடன் கேட்டுக் கொண்டிருந்தாா்.