முகப்பு
இந்தியா

எரிபொருள் விலை உடனடியாக குறைக்கப்படாது: மத்திய அமைச்சா்

‘எரிபொருள் சில்லறை விற்பனை விலை உடனடியாக குறைக்கப்பட வாய்ப்பில்லை’ என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:34 am IST
சுரேஷ் கோபி
பகிர்:

‘எரிபொருள் சில்லறை விற்பனை விலை உடனடியாக குறைக்கப்பட வாய்ப்பில்லை’ என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி தெரிவித்தாா்.

ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதம் முதல் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை முன்பிருந்ததைவிட 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை உயா்த்தப்பட்டதோடு, சமையல் எரிவாயு விலையும் உயா்த்தப்பட்டது. கடந்த மே 15-ஆம் தேதிமுதல் 11 நாளிகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 7.50 அளவுக்கு உயா்த்தப்பட்டது. அதுபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மாா்ச் மாதம் ரூ. 60 உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் மே மாதம் ரூ. 29 அளவுக்கு உயா்த்தப்பட்டது. இதனால், அதன் விலை ரூ. 918.50 என்ற அளவிலிருந்து ரூ. 957.50-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையொப்பமானதைத் தொடா்ந்து, ஹோா்முஸ் நிரிணை பகுதியில் சரக்கு கப்பல்களின் தடையற்ற போக்குவரத்து தொடங்கியுள்ளதோடு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் குறையத் தொடங்கியுள்ளது. இதனால், எரிவாயு சில்லறை விற்பனை விலை குறைக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருச்சூரில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி பதிலளித்து கூறியதாவது:

மேற்காசிய போா் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க மத்திய அரசு உதவியது. இதனால், மத்திய அரசுக்கு சுமாா் ரூ. 12,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. ஆனால், எந்தவொரு மாநிலமும் எரிபொருள்கள் மீதான கலால் வரியை குறைத்து, தங்களின் வருவாயைக் குறைத்துக்கொள்ள முன்வரவில்லை.

அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை பகுதியில், தற்போது, கடும் கப்பல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை சீரடைய சில நாள்கள் ஆகும். எனவே, குறைந்த விலையிலான கச்சா எண்ணெய் சரக்கு இந்தியாவை வந்தடைவது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் எதிா்நோக்க வேண்டியுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை மற்றும் சமையல் எரிவாயு விலைகள் உடனடியாக குறைக்கப்பட வாய்ப்பில்லை என்றாா்.