முகப்பு
தலையங்கம்

புயலடிக்கப் போகிறது...

ஹோர்முஸ் நீரிணைப் பிரச்னையால் கச்சா எண்ணெய், எரிவாயு மட்டும்தான் முடங்கி இருக்கிறது என்று கருதிவிடக் கூடாது.

Updated On : 22 மே 2026, 6:17 am IST
கோப்புப் படம்
பகிர்:

மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்தை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வோர் இந்தியனும் உணர வேண்டிய தருணம் இது. சர்வதேச அளவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மேற்காசியப் போரின் தாக்கம், இதுவரையில் நம்மைப் பாதிக்காமல் காத்த நரேந்திர மோடி அரசு இனியும் எதார்த்தத்தை எதிர்கொள்ளாமல் தவிர்க்க முடியாது.

ஹோர்முஸ் நீரிணைப் பிரச்னையால் கச்சா எண்ணெய், எரிவாயு மட்டும்தான் முடங்கி இருக்கிறது என்று கருதிவிடக் கூடாது. அதன் தொடர்ச்சியாக, இறக்குமதிகள் தடைபட்டிருப்பதால் உற்பத்தி தடைபட்டிருப்பதுடன், நமது ஏற்றுமதிகளும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது கண்ணுக்குத் தெரிகிறது என்றால், ஏனைய எல்லாப் பொருள்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மெல்ல மெல்லத் தலைதூக்கத் தொடங்கி இருக்கின்றன.

என்னவெல்லாம் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டி இருப்பதைத் தொடர்ந்து, மத்திய- மாநில அரசுகள் விழித்துக்கொள்ள வேண்டும். அதிகரித்த கச்சா எண்ணெய் விலையால் அச்சத்துக்கு உள்ளாகி இருக்கும் நிதிநிலையை எதிர்கொள்வதற்கான உத்திகளையும், நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. கடுமையான நிதி நெருக்கடியை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம் என்பதை உணராமல் போனால், மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

Advertisement

Advertisement

பல்வேறு சிக்கன நடவடிக்கையால் நம்மிடம் இருக்கும் அந்நியச் செலாவணியைக் கையாள்வதுதான் முதல் பணியாக இருக்கும். அதிகரித்துவரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையுடன் வெளியேறும் அந்நிய நேரடி முதலீடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதிகரிக்கப்போகும் அந்நியச் செலவின இடைவெளியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும். அதைவிடப் பெரிய பிரச்னையாக உருவாகப் போவது, நமது உள்நாட்டு நிதிநிலைமை.

கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயுவின் விலை மத்திய அரசால் இரண்டு முறை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறை வங்கிகள் என்பவை எப்படியெல்லாம் அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்தலாம் என்று வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதிகரித்துவிட்ட கச்சா எண்ணெய் விலையால் கடுமையான இழப்பை எதிர்கொள்ளும் எண்ணெய் நிறுவனங்கள் ஓரளவுக்குத் தங்கள் இழப்பை இதன் மூலம் ஈடுகட்டும். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2026-27-க்கான மத்திய பட்ஜெட்டில் நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு ஜிடிபியில் 4.3% என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அப்போது மேற்காசியப் போரின் விளைவுகள் தெரிந்திருக்கவில்லை. இப்போது வருவாய், செலவினம் இரண்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மார்ச் 26-ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ. 10 குறைக்கப்பட்டது. இதன் விளைவாக 2026-27- இல் ஏற்படும் வருவாய் இழப்பு சுமார் ரூ. 1 டிரில்லியனிலும் அதிகம். இதனால், மாநில அரசுகள் பாதிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

செலவினங்கள் என்று எடுத்துக் கொண்டால், மத்திய அரசு மிகப் பெரிய உர மானியச் சுமையை எதிர்கொள்ளப் போகிறது. 2026-27 பட்ஜெட்டில் உர மானியச் செலவு ரூ. 1.7 டிரில்லியன் என்று கணிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் அளவு ரூ. 2.4 டிரில்லியனாக உயரும். அதாவது ரூ. 70,000 கோடி அதிகரித்த நிதிச் சுமையை எதிர்கொள்ள வேண்டும்.

கடந்த பிப்ரவரி 28 அன்று மேற்காசியப் போர் தொடங்கியதும், பொருளாதார நிலைநிறுத்தல் நிதி (ஸ்டெபிலைசேஷன் ஃபண்ட்) என்று சர்வதேச நிலைமை, விநியோகச் சங்கிலி பாதிப்பு, சில துறைகளின் மீதான திடீர் அழுத்தம் போன்றவற்றை எதிர்கொள்ள மத்திய அரசு ரூ. 1 டிரில்லியன் ஒதுக்கி வைத்தது. ஒருவகையில் இது புத்திசாலித்தனமான முடிவுதான் என்றாலும்கூட, அரசின் நிதிநிலைமை மீது இந்த ஒதுக்கீடு அழுத்தம் கொடுக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் கடன்களுக்கு உத்தரவாதம் வழங்க ரூ.2.55 டிரில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் உடனடியாக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் சுமை ரூ. 18,000 கோடி. பெட்ரோலிய பொருள்கள் மீதான ஏற்றுமதி வரி மூலம் கிடைக்கும் வருவாய் ஒருபுறம் இருந்தாலும்கூட, அதிகரித்த செலவும், வருவாய் இழப்பும் சுமார் ரூ.2.9 ட்ரில்லியன் என்று கணக்கிடப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ஜிடிபியில் 5% -க்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறையை அரசு எதிர்கொள்ளக்கூடும்.

பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசுத் தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் வரி வருவாயைத்தான் நம்பி இருக்கின்றன. அந்த மாநிலங்களின் சொந்த வருவாயில் ஏறத்தாழ பாதி அளவிலான தொகை கூடுதலாக மத்திய அரசிடமிருந்து கிடைக்கிறது. மத்திய அரசின் வருவாய் பாதிக்கப்படும்போது அதன் நேரடி விளைவாக மாநிலங்களுக்கான ஒதுக்கீடும் குறைக்கப்படும்.

மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் தங்கள் செலவினங்களைக் குறைத்துக் கொள்வதிலும், சொந்த நிதியாதாரத்தை அதிகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தாமல் இப்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது. உரிமைக்குக் கூட்டாட்சித் தத்துவம் பேசும் மாநிலங்கள்,தேசியப் பேரிடரிலும் கூட்டாட்சிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்ப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.