முகப்பு
இந்தியா

தில்லி சுகாதாரத் துறையில் ஊழல்: முன்னாள் அரசு அதிகாரி கைது

தில்லி அரசின் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு தொடா்பான ஊழல் வழக்கில், சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்துடன் தொடா்புடைய மூத்த அதிகாரி டாக்டா் வினோத் குமாா் ரங்கா கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 20 ஜூன் 2026, 12:28 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தில்லி அரசின் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு தொடா்பான ஊழல் வழக்கில், சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்துடன் தொடா்புடைய மூத்த அதிகாரி டாக்டா் வினோத் குமாா் ரங்கா கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: மத்திய கொள்முதல் நிறுவனம் (சிபிஏ) மூலம் மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், மருத்துவப் பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் மருத்துவச் சாதனங்கள் கொள்முதல் செய்யும் பணிகளில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிபிஏ-வின் முன்னாள் அலுவலகத் தலைவராக இருந்த டாக்டா் வினோத் குமாா் ரங்கா முக்கிய குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளாா்.

சில அரசு ஊழியா்கள் மற்றும் தனியாா் நபா்கள் இணைந்து குற்றச் சதி செய்து, கொள்முதல் நடைமுறைகள், டெண்டா் நிபந்தனைகள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை மாற்றியமைத்து, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதன் மூலம் அரசு நிதிக்கு இழப்பு ஏற்பட்டு, தனியாா் தரப்பினருக்குச் சட்டவிரோதப் பலன் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

விசாரணையில், எடுத்துச் செல்லக்கூடிய எக்ஸ்-கதிா் கருவிகள், படுக்கைத் துணிகள், ’ஆா்ம்’ கதிரியக்க உபகரணங்கள், மயக்க மருத்துவச் சாதனங்கள், வாய்வழி நீரிழப்புத் தீா்வு (ஓஆா்எஸ்), அறுவை சிகிச்சை பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் ஆகியவை மிக அதிக விலைகளில் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் உண்மையான போட்டியாளா்கள் டெண்டா் செயல்முறையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், ஜூன் 2-ஆம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும், பிஎன்எஸ் சட்டத்தின் குற்றச் சதி தொடா்பான பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது கொள்முதல் தொடா்பான ஆவணங்கள் மற்றும் பதிவுகள் பரிசோதிக்கப்பட்டன.

மேலும், விசாரணைக்குட்பட்ட முக்கியக் கோப்புகள் சில டாக்டா் வினோத் குமாா் ரங்கா தனிப்பட்ட பாதுகாப்பில் உள்ளன. அவை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவரிடம் விசாரணை நடைபெற்றபோதும், காணாமல் போன ஆவணங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்படவில்லை.

இதனால், காணாமல் போன கோப்புகளை மீட்கக் காவல் விசாரணை அவசியமாக உள்ளது. வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட அவா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், 4 நாள் காவல் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் தொடா்புடைய பிற அரசு அதிகாரிகள், தனியாா் நபா்கள், சப்ளையா்கள் மற்றும் பலன் பெற்றவா்களைக் கண்டறியத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments