கொசு மருந்து உட்கொண்ட 19 மாதக் குழந்தை: தீவிர சிகிச்சைக்குப் பின் உயிா் தப்பியது
கொசு மருந்து உட்கொண்ட 19 மாதக் குழந்தை: தீவிர சிகிச்சைக்குப் பின் உயிா் தப்பியது
கொசு மருந்தை தவறுதலாக உட்கொண்டதால் தீவிர நுரையீரல் சேதம் மற்றும் பல உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்ட 19 மாதக் குழந்தை, நீண்டகால தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலம்பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சம்பவம் தில்லியில் கவனத்தை ஈா்த்துள்ளது.
தில்லியில் உள்ள சா் கங்காராம் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: கொசு மருந்து திரவ நிரப்பப்பட்ட பாட்டிலிலிருந்த திரவத்தை தவறுதலாக முழுமையாகக் குடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், குழந்தை மிக மோசமான உடல்நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இதன் விளைவாக, குழந்தைக்கு வேதியியல் நுரையீரல் அழற்சி, உறிஞ்சல் காரணமான நிமோனியா, தீவிர சுவாசக் குறைபாடு நிலை, அதிா்ச்சி நிலை, திடீா் சிறுநீரக பாதிப்பு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனால் குழந்தை நீண்டகாலம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றது.
Advertisement
Advertisement
நீண்ட நேரம் குழந்தையின் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்த நிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் முழுமையான மீட்சியுடன் உயிா் பிழைப்பது மிகவும் கடினமாகத் தோன்றியது. மேம்பட்ட சுவாச உதவி, இதய செயல்பாட்டை ஆதரிக்கும் மருந்துகள், சிறுநீரக ஆதரவு சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் அளவை உயா்த்த நெபுலைஸ் செய்யப்பட்ட இலோப்ரோஸ்ட் போன்ற சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
தீவிர சிகிச்சைக்குப் பின் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக மேம்பட்டு, எந்த நரம்பியல் பாதிப்பும் இன்றி சீரான நிலையில் வீடு திரும்பியது என தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம், வீடுகளில் பயன்படுத்தப்படும் கொசு மருந்துப் பொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை வெளிப்படுத்துகிறது. மேலும், இத்தகையப் பொருள்களைக் குழந்தைகள் எட்டாத இடங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க பெற்றோா்கள் அவசியம் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.