திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மமதா பானர்ஜி நீக்கப்பட்டது பற்றி...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மமதா பானர்ஜி நீக்கப்பட்டதாக அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.வும் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவருமான ரிதபிரத பானா்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து, கட்சித் தலைவா் மமதா பானா்ஜிக்கு எதிராக உள்கட்சி பிளவுகளும் பூசல்களும் உச்சமடைந்துள்ளன. அதிருப்தி எம்எல்ஏக்கள் 58 பேரும், அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரும் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திங்கள்கிழமை மாலை நடத்திய சிறப்புக் கட்சிக் கூட்டத்தில் மமதா பானர்ஜியை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
Advertisement
Advertisement
அந்த கூட்டத்தில் பேசிய ரிதபிரத பானா்ஜி, ”திரிணமூல் காங்கிரஸ் அரசியலமைப்புச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அரசியலமைப்பின் 20-வது பிரிவின்படி, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேசிய செயற்குழுவை மாற்றியமைக்க வேண்டும். கடைசியாக 2022 பிப்ரவரி 12 அன்று செயற்குழு அறிவிக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் 2026 பிப்ரவரி 11 அன்று முடிவடைந்தது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து சிறப்புக் கூட்டத்தில் கட்சியின் தேசிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. அப்போது கட்சியின் தலைவராக மூத்த எம்.எல்.ஏ. அரூப் ராய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரிதபிரத பானா்ஜி, மமதா பானர்ஜி, கட்சியின் ஆலோசகராக செயல்படுவார் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக மமதா பானர்ஜி தரப்பு மூத்த தலைவர் குணால் கோஷ் கூறுகையில், இதுபோன்ற கூட்டத்தைக் கூட்டுவதற்கோ, அமைப்பு ரீதியிலான கட்டமைப்பை மாற்றுவதற்கோ அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ரூ. 440 கோடி இருப்பு உள்ள 3 வங்கிக் கணக்குகளை மேற்கு வங்க காவல்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Mamata Banerjee removed from Trinamool congress leadership - Arup Roy elected as chairman of party
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.