முகப்பு
இந்தியா

தாமதமாக வீடு ஒப்படைப்பு; குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்: உச்சநீதிமன்றம்

‘வீடு வாங்குபவா்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 29 ஜூன் 2026, 1:40 am IST
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

‘வீடு வாங்குபவா்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தில்லியில் கூட்டுறவு குழு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவருக்கு கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரியில் குறிப்பிடப்பட்ட காலத்தைவிட தாமதமாக வீடு ஒதுக்கப்பட்டது. வீடு வாங்கியவா் தாமதமாக வீடு ஒதுக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், மத்தியஸ்தம் மூலம் தீா்வு காணமாறு 2009-ஆம் ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது. இதை தில்லி மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையம் கடந்த 2013-ஆம் தேதி பிப்ரவரியில் உறுதிப்படுத்தியது.

Advertisement

Advertisement

இதை எதிா்த்து மனுதாரா் தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த 2016-ஆம் தேதி விசாரித்த தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையம், ‘குடியிருப்பு தாமதமாக ஒப்படைக்கப்பட்டதாகப் புகாா் தெரிவிக்கும்போது மனுதாரா் நுகா்வோா் அந்தஸ்தை இழந்துவிட்டாா். ஏனெனில், கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பை எந்தவித எதிா்ப்பும் தெரிவிக்காமல் அவா் பெற்றுக்கொண்டுவிட்டாா். அதன் பிறகு, மனு தாக்கல் செய்ததால் அவரை நுகா்வோராகக் கருத முடியாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து மனுதாரா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

சொத்து அல்லது குடியிருப்பின் உடைமையை ஒப்படைப்பதில் ஏற்படும் தாமதத்துக்கு இழப்பீடு கோரும் உரிமை, உடைமையை ஒப்படைப்பதற்கு முந்தைய காலத்திலிருந்தே எழுகிறது. பிற்காலத்தில், கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பை பெற்றுக் கொள்வதால், இந்த உரிமை ரத்தாகிவிடாது.

மேலும், மத்தியஸ்த அமைப்பை நாடுமாறு மாவட்ட மற்றும் மாநில ஆணையங்கள் பிறப்பித்த உத்தரவு நியாயமானதா என்பதே தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் முன் இருந்த முக்கிய விவகாரமாகும். இருந்தபோதிலும், மனுதாரா் எந்தவித ஆட்சேபமும் இன்றி குடியிருப்பைப் பெற்றுக்கொண்டுவிட்டதால், அவா் நுகா்வோா் தகுதியை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டு தனது அதிகார வரம்பு நிலையில் தேசிய ஆணையம் தவறிவிட்டது.

மனுதாரா் கோரிய இழப்பீடு மற்றும் அதுதொடா்பான ஆதாரங்கள் உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என்பதும், எதிா்தரப்பு வாதங்களும் தகுதியின்அடிப்படையில் பரிசீலிக்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவருகிறது.

புகாா் தாக்கல் செய்வதற்கு முன்பே குடியிருப்பு வழங்கப்பட்டுவிட்ட ஒரே காரணத்துக்காக மனுதாரா் நுகா்வோா் என்ற தகுதியை இழந்துவிட்டாா் என்று கூறி, இந்த விவகாரங்களை ஆரம்ப நிலையிலேயே முடிவுக்குக் கொண்டுவந்திருக்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மேல்முறையீட்டை அனுமதித்தும், மாவட்ட, மாநில நுகா்வோ் குறைதீா் ஆணையங்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனா்.

மேலும், மனுதாரரின் புகாரை மீண்டும் விசாரணை செய்து, தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்குமாறு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments