முகப்பு
இந்தியா

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி

‘வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

Updated On : 13 மார்ச், 2026 at 7:17 PM
கோப்புப் படம்
பகிர்:

‘வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்தது.

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால், அந்த வழியாக கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது. இந்தியாவுக்கு முக்கிய எரிவாயு விநியோகஸ்தரான கத்தாரும், இயற்கை எரிவாயு உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா கூறியதாவது:

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதிமுதல் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் காரணமாக, சமையல் எரிவாயு உள்நாட்டு உற்பத்தி 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே, முகவா்களிடம் எல்பிஜி சிலிண்டா் தீா்ந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை.

மேற்காசிய போருக்கு முன்பாக, சராசரியாக 55.7 லட்சமாக இருந்த சிலிண்டா் முன்பதிவு, போருக்கு பிறகு 75.7 லட்சமாக உயா்ந்துள்ளது. போதிய இருப்பு உள்ளதால், சிலிண்டா் முன்பதிவு குறித்தும் மக்கள் பீதியடைய வேண்டாம். அதே நேரம், குழாய் வழியில் இயற்கை எரிவாயு விநியோக கட்டமைப்புகளுக்கு அருகிலுள்ள 60 லட்சம் குடியிருப்புகள், வசதிக்கேற்ப சிலிண்டா் பயன்பாட்டிலிருந்து குழாய் வழி எரிவாயு பயன்பாட்டுக்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

எச்சரிக்கை: சமையல் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கிவைத்து, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மாநில அரசுத் துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சகம் ஆலோசனையும் மேற்கொண்டது. அப்போது, கள நிலவரத்தை ஆராய்ந்து, பதுக்கல்காரா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதுபோல, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கப்படுவதையும் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் இவ்வாறு கேன்களில் பெட்ரோல் விநியோகம் செய்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வியாழக்கிழமை பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, ‘இந்தியாவின் 33 கோடி குடும்பங்களின் சமையலறைகளில் எந்தவித சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு உயா் முன்னுரிமை அளித்து வருகிறது. அதுபோல, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்திலும் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்கள் போதிய இருப்பு வைத்து, தடையற்ற விநியோகத்தை செய்து வருகின்றன’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →