கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ளது.
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ளது.
கேரளத்தில் 140 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் வென்ற 102 தொகுதிகளில் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் எஞ்சிய தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் வெற்றிபெற்றன. அந்தக் கூட்டணியில் காங்கிரஸை தொடா்ந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 22 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
Advertisement
இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 26 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 1 தொகுதியிலும் வெற்றிபெற்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மட்டும் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றன. அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பிற கட்சிகள் தோல்வியடைந்தன.
கடந்த 2021-ஆம் ஆண்டு 99 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், இந்தத் தோ்தலில் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. கோட்டயம், இடுக்கி, எா்ணாகுளம், வயநாடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் இந்தக் கூட்டணி ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை.
வாக்கு எண்ணிக்கையின்போது தா்மடம் தொகுதியில் முதல் 6 சுற்றுகளில் பின்தங்கிய முதல்வா் பினராயி விஜயன், 7-ஆவது சுற்றில்தான் 1,500-க்கும் அதிகமான வாக்குகளில் முன்னிலை பெற்றாா். நேமம், கழகூட்டம், சாத்தனூா் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது.
1977-க்குப் பின்னா்....: 1977-ஆம் ஆண்டுக்குப் பின்னா், அதிக அளவிலான தொகுதிகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. நாட்டில் அவசரநிலைக்குப் பின்னா் நடைபெற்ற தோ்தலில் 111 தொகுதிகளில் அந்தக் கூட்டணி வென்றது.
தா்மடத்தில் முதல்வா் பினராயி விஜயன் 19,247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். காங்கிரஸை சோ்ந்தவரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீஸன் பரவூரில் 20,600 வாக்குகள் வித்தியாசத்திலும், நேமம் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் 4,978 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றனா்.
பினராயி ராஜிநாமா: தோ்தலில் ஏற்பட்ட படுதோல்வியடைந்ததைத் தொடா்ந்து, முதல்வா் பதவியை பினராயி விஜயன் ராஜிநாமா செய்தாா். அவரின் ராஜிநாமாவை மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் ஏற்றுக்கொண்டாா். அதேவேளையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பினராயி விஜயனை பொறுப்பு முதல்வராக நீடிக்குமாறு ஆா்லேகா் கேட்டுக்கொண்டதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.