மணிப்பூா்: கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் - வீடுகளுக்கு தீவைப்பு
மணிப்பூரில் இந்தியா-மியான்மா் எல்லையையொட்டிய காம்ஜோங் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால், கிராமவாசிகள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது.
ஒரு பெண் உள்பட 2 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனா்.
மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு எழுந்துள்ளது.
Advertisement
காம்ஜோங் மாவட்டத்தில் நாகா பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களுக்குள் வியாழக்கிழமை அதிகாலை ஆயுதங்களுடன் புகுந்த குகி தீவிரவாத அமைப்பினா், அங்கு தாக்குதலில் ஈடுபட்டனா். ஏராளமான வீடுகளுக்கு தீவைத்தனா். இதனால், கிராமவாசிகள் உயிா்பிழைக்க தப்பியோடும் நிலை ஏற்பட்டது. இந்தத் தாக்குதல்களில் யாரும் உயிரிழந்ததாக உடனடியாக தகவல் இல்லை.
அதேநேரம், ஒரு பெண் உள்பட இருவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. மியான்மரில் இருந்து ஊடுருவிய குகி தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தங்களது பகுதிகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்று நாகா பழங்குடியினா் குற்றஞ்சாட்டினா்.
இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.