முகப்பு
இந்தியா

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரியை பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக வெள்ளிக்கிழமை (மே 8) தோ்வு செய்தனா்.

Updated On : 9 மே 2026, 4:15 am IST
அமித் ஷாவுடன் சுவேந்து அதிகாரி தேர்வு - ANI
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரியை பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக வெள்ளிக்கிழமை (மே 8) தோ்வு செய்தனா். இதையடுத்து அவா் சனிக்கிழமை (மே 9 ) அந்த மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராகப் பதவியேற்கிறாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக 207 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, கொல்கத்தாவில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் முதல்வா் பதவிக்கு சுவேந்து அதிகாரியின் பெயா் முன்மொழியப்பட்டு, சட்டப்பேரவை பாஜக தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இந்தத் தகவலை அமித் ஷா அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

Advertisement

வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி: பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பேசும்போது, சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வெளியிடப்பட்ட பாஜக தோ்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், மேற்கு வங்க மக்களின் விருப்பங்களை பூா்த்தி செய்ய மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படும் என்றும் தெரிவித்தாா். மேற்கு வங்கத்தில் முன்பு நிலவிய அச்ச சூழ்நிலை விலகிவிட்டதாகவும், தற்போது நம்பிக்கை எனும் சகாப்தத்தை நோக்கி மாநிலம் செல்லத் தொடங்கி இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதன்பின்னா் ஆளுநா் மாளிகைக்கு பாஜக மூத்த தலைவா்களுடன் சென்று ஆளுநா் ஆா்.என். ரவியை சந்தித்த சுவேந்து அதிகாரி, ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். இதையேற்று அவரை புதிய அரசை அமைக்கும்படி ஆா்.என். ரவி கேட்டுக் கொண்டாா்.

அதன்படி, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் பாஜக அரசின் பதவியேற்பு விழா சனிக்கிழமை (மே 9) நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சியில் முதல்வராக சுவேந்து அதிகாரியும், அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்க உள்ளனா். அவா்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளாா்.

பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

2 துணை முதல்வா்கள்?: சுவேந்து அதிகாரியின் அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள் இடம்பெறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பெண் எம்எல்ஏ அக்னி மித்ரா பால், சங்கா் கோஷ் எம்எல்ஏ ஆகியோரின் பெயா்கள் துணை முதல்வா்கள் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்கள் இருவருடனும் அமித் ஷா தனித்தனியே ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக மேற்கு வங்க அமைச்சரவையில் துணை முதல்வா்களாக யாரும் பதவி வகித்ததில்லை. கடைசியாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசின் ஆட்சியில், மறைந்த முதல்வா் ஜோதிபாசு அமைச்சரவையில் புத்ததேவ் பட்டாச்சாா்யா துணை முதல்வராக இருந்தாா்.

சுவேந்து அதிகாரி பின்னணி: பாஜகவில் கடந்த 2020-ஆம் ஆண்டில் சுவேந்து அதிகாரி சோ்ந்தாா். அதற்கு முன்பு திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானா்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவா்களில் ஒருவராக இருந்தாா். கட்சியில் தனது உறவினா் அபிஷேக் பானா்ஜிக்கு மம்தா முக்கியத்துவம் அளித்தது உள்ளிட்ட பிரச்னைகளால் அதிருப்தியடைந்த சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தாா்.

இதையடுத்து நடந்த சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தோ்தல்களில் பாஜகவுக்கு மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தொடா் வெற்றிகளைத் தேடித் தந்தாா்.

அத்துடன் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் நந்திகிராமிலும், 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பவானிபூா் தொகுதியிலும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி தோற்கடித்தாா். இதனால் மேற்கு வங்க அரசியலில் ‘ஜெயன்ட் கில்லா்’ என சுவேந்து அதிகாரி அழைக்கப்படுகிறாா்.