இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!
நமது நாட்டின் இளைஞர்களை நான் விமர்சித்ததாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றதாகும் - தலைமை நீதிபதி
புது தில்லி : இந்தியாவில் வேலையில்லா இளையோரைச் சுட்டிக்காட்டி அவர்களை ‘கரப்பான்பூச்சி’ என விமர்சித்து கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் சர்ச்சையில் சிக்கி கண்டனங்களைச் சம்பாதித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த், இவ்விவகாரத்தில் உரிய விளக்கமளித்து தம் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவரை மூத்த வழக்குரைஞராக நியமனம் செய்தல் தொடர்பான விவகாரம் குறித்த மனுவை வெள்ளிக்கிழமை(மே 15) விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு, சரமாரியாக கேள்வியெழுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தியது.
வழக்கு விசாரணையில் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், “சமூகத்தில் ஏற்கெனவே ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. அவை சமூக அமைப்பை தாக்கி வருகின்றன. இந்த நிலையில், மனுதாரரும் அவர்களுடன் கைகோக்க விரும்புகிறாரா?
Advertisement
Advertisement
கரப்பான்பூச்சிகளைப் போன்று பல இளைஞர்கள் இங்கு உள்ளனர். அவர்கள் வேலை கிடைக்காமலும் அல்லது எவ்வித பணியிலும் சேராமலும் உள்ளனர். அவர்களுள் சிலர் ஊடகமாக மாறி விட்டனர். சிலரோ தகவல் அறியும் உரிமை கோரும் செயல்பாட்டாளர்களாகவும் பிற செயல்பாட்டாளர்களாகவும் மாறி ஒவ்வொருவரையும் தாக்க தொடங்கிவிட்டனர்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து, சனிக்கிழமை(மே 16) அவர் பேசியிருப்பதாவது :
“ஊடகங்களில் சில குறிப்பிட்ட பிரிவினர் எமது பேச்சைத் தவறாகச் சித்திரித்துவிட்டனர். பார் அசோசியேசன் உள்ளிட்ட பணிகளைச் சுட்டிக்காட்டியே, அவர்கள் போலியான பட்டங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றின் உதவியுடன் இத்தகைய பணிகளில் அடியெடுத்து வைக்கின்றனர் என்பதனைச் சுட்டிக்காட்டியே நான் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தேன்.
அத்தகைய மனிதர்கள் ஊடகம், சமூக ஊடகங்கள் மற்றும் பிற மாண்புமிகு பணிகளில் ஊடுருவி உள்ளனர். அவர்களைப் போன்றவர்களே ஒட்டுண்ணிகளாவர்.
நமது நாட்டின் இளையோரை நான் விமர்சித்ததாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.
இப்போதைய மற்றும் வருங்கால மனிதவளத்தைப் பற்றி நான் பெருமை கொண்டிருப்பதுடன், ஒவ்வோர் இளையோரும் எனக்கு உத்வேகமளிக்கிறார்கள். இந்திய இளையோர் எம் மீது பெரும் மதிப்பு பூண்டுள்ளனர் என்று சொன்னால் அது மிகையல்ல.
அவர்களை வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூண்களாக நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Chief Justice of India Surya Kant on Saturday issued a clarification on his earlier remarks in court, where he compared unemployed youngsters to “cockroaches" and “parasites" who are attacking the system.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.