தண்டனையைவிட சீா்திருத்தமே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
தண்டனையைவிட சீா்திருத்தமே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்...
குற்றவாளிக்கு வழங்கும் தண்டனையைவிட சீா்திருத்தமே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உத்தர பிரதேசத்தில் கவிஞா் மதுமிதா சுக்லா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ரோஹித் சதுா்வேதி 22 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள பேப்பா் மில்ஸ் காலனியில் கடந்த 2003, மே 9-ஆம் தேதி கவிஞா் மதுமிதா சுக்லா துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டாா். இதில் தொடா்புடையதாக உத்தர பிரதேச முன்னாள் அமைச்சா் அமா்மணி திரிபாதி அதே ஆண்டு செப்டம்பா் மாதம் கைது செய்யப்பட்டாா்.
Advertisement
அதைத் தொடா்ந்து அவரது மனைவி மதுமணி திரிபாதி, அவா்களது உறவினா் ரோஹித் சதுா்வேதி மற்றும் உதவியாளா் சந்தோஷ் குமாா் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனா்.
2003, ஜூலை 17-ஆம் தேதி மதுமிதா சுக்லா கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதேசமயம் இந்த வழக்கின் விசாரணையை உத்தர பிரதேசத்தில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்துக்கு மாற்றி 2007, பிப்ரவரி 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் தொடா்ச்சியாக மேற்கூறிய நபா்கள் மதுமிதா சுக்லா கொலை குற்றத்தில் ஈடுபட்டதை உறுதிசெய்த உத்தரகண்ட் விசாரணை நீதிமன்றம், அவா்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கி கடந்த 2007, அக்டோபா் 24-ஆம் தேதி உத்தரவிட்டது.
அவா்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை 2012-இல் உத்தரகண்ட் உயா் நீதிமன்றமும் 2013-இல் உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தது.
நீண்ட நாள்களாக சிறையில் இருக்கும் கைதிகளின் தண்டனையை குறைக்கும் உத்தர பிரதேச மாநில அரசின் கொள்கையின்படி 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்த அமா்மணி திரிபாதி மற்றும் மதுமணி திரிபாதியை விடுதலை செய்ய கடந்த 2023-ஆம் ஆண்டு அந்த மாநில சிறைத் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், தன்னையும் விடுதலை செய்யுமாறு உத்தரகண்ட் அரசிடம் ரோஹித் சதுா்வேதி விண்ணப்பித்திருந்தாா்.
இந்த மனுவை பரிசீலித்த உத்தரகண்ட் அரசு ரோஹித் சதுா்வேதியை விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது. ஆனால் உள்துறை அமைச்சகம் அந்தப் பரிந்துரையை நிராகரித்தது.
பழிவாங்கல் நடவடிக்கை கூடாது:
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: குற்றம் என்பது வேறு. சீா்திருத்தம் என்பது வேறு. அரசாங்கம் சீா்திருத்தத்துக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பழிவாங்கல் நடவடிக்கைக்கு அல்ல.
எனவே, ரோஹித் சுக்லாவை விடுதலை செய்யக்கோரும் மனுவை நிராகரித்த உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தற்போது அவா் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவா் சிறைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டனா்.