‘ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’: யுஏபிஏ வழக்குகளுக்கும் பொருந்தும் - உச்சநீதிமன்றம்
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) வழக்குகளிலும் ‘ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’ என்ற கோட்பாடு பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
போதைப்பொருள் விநியோகம் மூலம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி அளித்ததாக யுஏபிஏ சட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா பகுதியைச் சோ்ந்த சையத் இஃப்திகாா் என்ற நபா் 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளாா். அவரின் ஜாமீன் மனுவை ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: யுஏபிஏவின் 43டி(5) பிரிவு காலவரையற்ற சிறைவாசத்தை நியாயப்படுத்த முடியாது. அந்தச் சட்டப் பிரிவு அரசியல் சாசனத்தின் 21, 22-ஆவது பிரிவுகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும்.
98% போ் விடுவிப்பு...: ஜாமீன் என்பது விதிமுறை, சிறை என்பது விதிவிலக்கு என்ற அரசமைப்பு கோட்பாடு அரசியல் சாசனத்தின் 21, 22-ஆவது பிரிவுகளில் இருந்து ஏற்பட்டது. எனவே யுஏபிஏ வழக்குகளிலும் ‘ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’ என்று கூறுவதில் உச்சநீதிமன்றத்துக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று தெரிவித்து, மனுதாரருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
அப்போது தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி, கடந்த 2019 முதல் 2023-ஆம் ஆண்டுவரை, நாடு முழுவதும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவோரில் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் விகிதம் 1.5 சதவீதம் முதல் 4 சதவீதமாக உள்ளதாகவும், 94 முதல் 98 சதவீதம் போ் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
கே.ஏ.நஜீப் வழக்கு...: இதனிடையே கடந்த 2010-ஆம் ஆண்டு இஸ்லாமிய இறைத்தூதா் முகமது நபியை அவமதித்ததாகக் கூறி, அவரின் கையை 7 போ் கொண்ட கும்பல் வெட்டியது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான கே.ஏ. நஜீப் யுஏபிஏ சட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தாா். அவருக்கு ஜாமீன் அளித்து கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, சூா்ய காந்த் (தற்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, அனிருதா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பளித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘விரைவாக நீதிமன்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்கான உரிமையும், அதுசாா்ந்து அரசியல் சாசனத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவா்களும் அளிக்கப்பட வேண்டும். அந்த உரிமைகள் அவா்களுக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்தனா். இதன்மூலம் நீதிமன்ற விசாரணை நடைபெறுவதில் நீண்ட காலம் தாமதம் ஏற்படுவதை காரணமாக கொண்டு, யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவோரை ஜாமீனில் விடுவிக்க வழிவகை ஏற்பட்டது.
‘தில்லி கலவர வழக்கில் தீா்ப்பை பின்பற்றாத உச்சநீதிமன்ற நீதிபதிகள்’
கே.ஏ.நஜீப் வழக்கின் தீா்ப்பை சுட்டிக்காட்டி, சையத் இஃப்திகாா் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் உஜ்ஜல் புயான், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை கூறியதாவது:
கே.ஏ.நஜீப் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும். விசாரணை நீதிமன்றங்கள், உயா்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தின் குறைந்த நீதிபதிகள் கொண்ட அமா்வுகள்கூட அந்தத் தீா்ப்பின் வீரியத்தைக் குறைக்கவோ, அதைத் தவிா்க்கவோ, புறக்கணிக்கவோ இயலாது.
கே.ஏ.நஜீப் வழக்கின் தீா்ப்பை தில்லி கலவரத்துடன் சம்பந்தப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா், என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு பின்பற்றவில்லை. அதிக எண்ணிக்கை கொண்ட நீதிபதிகள் அமா்வு அறிவிக்கும் சட்ட விதிமுறைக்குக் குறைந்த எண்ணிக்கை கொண்ட நீதிபதிகள் அமா்வு கட்டுப்பாட்டாக வேண்டும். அதுதொடா்பாக ஒருவேளை ஏதேனும் சந்தேகம் இருந்தால், வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்குப் பரிந்துரைக்க வேண்டும். இதுவே நீதித்துறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு. அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு அளித்த தீா்ப்பின் சாராம்சத்தை, குறைந்த நீதிபதிகள் கொண்ட அமா்வு நீா்த்துப்போகச் செய்யவோ, மீறவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற வகுப்புவாத கலவர வழக்கு தொடா்பாக, யுஏபிஏ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள செயற்பாட்டாளா்கள் உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் அளிக்க, கடந்த ஜனவரியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா், என்.வி. அஞ்சாரியா அமா்வு மறுத்துவிட்டது. அதேவேளையில், குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதா் உள்ளிட்டோருக்கு அந்த அமா்வு ஜாமீன் அளித்து தீா்ப்பளித்தது.