முகப்பு
தலையங்கம்

நடைபாதை அடிப்படை உரிமை!

அரசுகள் சாலைகளை அகலப்படுத்தினாலும் விரைவுச் சாலைகளை அமைத்தாலும் வாகனப் போக்குவரத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனவே தவிரப் பாதசாரிகள் குறித்து கவலைப்படுவதில்லை.

Updated On : 23 ஜூன் 2026, 6:15 am IST
நடைபாதை அடிப்படை உரிமை - பிரதிப் படம்
பகிர்:

தெளிவாக வரையறுக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்ட நடைபாதைகளில் நடப்பது என்பது பாதசாரிகளின் அடிப்படை உரிமை என்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 19) உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துர்கர் அடங்கிய அமர்வு தெரிவித்திருக்கிறது. "வாகனப் போக்குவரத்துக்கு சாலைகள் அமைப்பதை விட, பாதசாரிகள் நடப்பதற்கான நடைமேடைகளை அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' என்கிறது அந்த உத்தரவு.

கர்நாடகத்தைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் தனது தந்தையுடன் பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது டேங்கர் லாரி மோதி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அதிக இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின்போது இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கினார்கள்.

சாலையில் விசாலமான நடைபாதை இருப்பதை உறுதி செய்வது கிராம ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, நகர்ப்புற மேம்பாட்டு அமைப்புகளின் கடமையாகும். பொதுமக்கள் பாதுகாப்பாக நடப்பது என்பது அடிப்படை உரிமை என அரசமைப்புச் சட்டமும் அங்கீகரித்துள்ளது, உறுதி அளித்துள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

அரசுகள் சாலைகளை அகலப்படுத்தினாலும் விரைவுச் சாலைகளை அமைத்தாலும் வாகனப் போக்குவரத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனவே தவிரப் பாதசாரிகள் குறித்து கவலைப்படுவதில்லை. வாகன ஓட்டிகளும் நடப்பவர்களை இடையூறாக கருதும்போக்கு அதிகரித்துவிட்டது. நடைமேடை என்பது குடிமக்களுக்கு கடமைப்பட்டுள்ள நகராட்சி அமைப்புகளின் குறைந்தபட்ச கடமை. எல்லா சாலைகளிலும் நடைமேடை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நடைபாதை உரிமையைப் பாதுகாப்பது, இழப்பீடுகள் குறித்த கொள்கைகள் வகுப்பது தொடர்பாக சட்ட ஆணையம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, ஊரக மேம்பாட்டுத் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் கடந்த 2024}ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளில் கார் அல்லது இருசக்கர வாகனம் மோதி பாதசாரிகள் 19,680 பேர் உயிரிழந்துள்ளனர்; விபத்துகளில் உயிரிழந்தவர்களில் இது 20.6 சதவீதமாகும். பாதசாரிகள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 4,712 பேரும், அதைத் தொடர்ந்து பிகாரில் 4,149 பேரும், மகாராஷ்டிரத்தில் 3,344 பேரும், மேற்கு வங்கத்தில் 3,241 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நடைபாதை என்பது 4}5 அடி அளவுக்கு குறுகலாக இருக்கின்றன. அவை இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களாகவும் கடைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நடைமேடைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கின்றன என்பதுடன், நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் தெருவில் நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

தேசம் முழுவதும் தடையின்றி சுதந்திரமாக பயணிக்கும் அடிப்படை உரிமையை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 19(1) (4) பிரிவின் ஒரு பகுதியாகத்தான் நடைமேடைகளில் பாதுகாப்பாக நடக்கும் பாதசாரிகளின் உரிமையை நாம் காத்திட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் கருத்து மிகவும் முக்கியமானது. தனியாகப் பிரித்து, முறையாகப் பராமரிக்கப்பட்ட நடைமேடைகளை சாலையின் இரு புறங்களிலும் அமைப்பது என்பது அந்த அடிப்படை உரிமையின் வரம்பில் வரும் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

வாழ்வதற்கும் தனி நபர் சுதந்திரத்துக்குமான உரிமையை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 21}ஆவது பிரிவின் வரம்பிலும் நடைமேடைகளிலும் நடைபாதைகளிலும் பாதுகாப்பாக நடப்பதற்கான உரிமை உட்படுகிறது என்கிறது நீதிபதிகள் நரசிம்மா, சந்துர்கர் அமர்வு. அரசமைப்புச் சட்டத்தில் காணப்படும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான மனித உரிமையை உறுதிப்படுத்தும் தொடர் முயற்சிகளில் இப்போதைய தீர்ப்பும் இணைகிறது.

1978}இல் மேனகா காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மனித உரிமை, அடிப்படை உரிமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கான திருப்புமுனையாக அமைந்தது. மேனகா காந்தியின் கடவுச் சீட்டை அன்றைய ஜனதா அரசு பறிமுதல் செய்து , முடக்கியதை அடுத்து அவர் தனது அடிப்படை உரிமையைக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார். அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் 14}ஆவது பிரிவின் சமத்துவத்தையும், வெளிநாடுகளுக்குப் போக தனக்கு உரிமை வழங்கும் 21}ஆவது பிரிவையும், அரசின் நடவடிக்கை மீறுகிறது என்கிற மேனகா காந்தியின் வாதத்தை நீதிமன்றம் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது.

கைதிகளின் உரிமைகள், சுத்தமான சுற்றுச்சூழலுக்கான உரிமை, குடியிருப்பதற்கான உரிமை, 14 வயது வரை இலவசமாக கல்வி பெறுவதற்கான உரிமை, தன் மறைப்புக்கான (பிரைவசி) உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் வரம்புக்குள் கொண்டு வந்திருக்கிறது. அந்தப் பட்டியலில் இப்போது பாதசாரிகள் நடைமேடையில் நடப்பதற்கான உரிமையும் இணைகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து, நடைபாதைகள் விரைந்து அமைக்கப்பட வேண்டும். இருக்கும் நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும்.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவுஇலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.

(செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையே செய்வர்.

திருக்குறள் (எண் 640) அதிகாரம்: அமைச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments