தமிழக சட்டப்பேரவை உரிமை மீறல் வழக்கு முடித்துவைப்பு: உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் அமர்வு உத்தரவு
தமிழக சட்டப்பேரவை உரிமை மீறல் வழக்க்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்திருப்பது பற்றி...
சட்டப்பேரவை உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான நீண்டகால வழக்கை, உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் இடம்பெற்ற அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை முடித்துவைத்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் அரவிந்த் குமார், பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஜயமால்ய பாக்சி, விபுல் எம். பஞ்சோலி, ஸ்ரீ சந்திரசேகர், வி. மோகனா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த விவகாரத்தைப் பரிசீலித்த நீதிபதிகள், "இந்த ரிட் மனுக்கள் தற்போதைய சூழலில் காலாவதியாகிவிட்டதால் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. எனினும், இதில் எழுப்பப்பட்டுள்ள சட்டக் கேள்விகள் எதிர்காலத்தில் தகுந்த வழக்குகள் கையாளப்படும்போது உரிய நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்படும்' என்று குறிப்பிட்டனர்.
Advertisement
Advertisement
2003-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை விவரித்து "தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் வெளியிட்ட கட்டுரை மற்றும் தலையங்கங்களை மொழியாக்கம் செய்து, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஆதரவு நாளிதழான "முரசொலி' வெளியிட்டது. இந்தக் கட்டுரைகள் மற்றும் தலையங்கங்கள் வெளியிடப்பட்டது தொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் என். ரவி உள்ளிட்டோருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை உரிமை மீறல் குழு விசாரிக்க அப்போதைய பேரவைத் தலைவர் காளிமுத்து உத்தரவிட்டார்.
அதன்படி, உரிமை மீறல் குழு அளித்த பரிந்துரைப்படி, தொடர்புடைய பத்திரிகையாளர்களைக் கைது செய்ய 2003, நவம்பர் 7-இல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தங்கள் மீதான நடவடிக்கைகள எதிர்த்து தொடர்புடைய பத்திரிகையாளர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். அதைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் அவர்களுக்கு எதிரான தீர்மானம் 2004, ஆகஸ்டில் திரும்பப் பெறப்பட்டது. இந்த தகவலை செவ்வாய்க்கிழமை (அக். 6) நடந்த விசாரணையின்போது தமிழக சட்டப்பேரவை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். அப்போது தலைமை நீதிபதி, "இந்த வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டபோது, தீர்மானம் திரும்பப் பெறப்பட்ட இந்த முக்கியமான தகவல் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்படாமல் விடுபட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டினார். மேலும், தற்போதைய சூழலில் இந்த விவகாரம் காலாவதியாகிவிட்டதால் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று தலைமை நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.
சட்டக் கேள்விகள் திறந்திருக்கும்: நீதிபதிகள்
தனிநபரின் அடிப்படை உரிமைகள் மற்றும் பேரவை நடவடிக்கைகள் தொடர்பான விவகாரத்தில் எழுப்பப்பட்டுள்ள சட்டக் கேள்விகள் எதிர்காலத்தில் தகுந்த வழக்குகளில் உரிய நடைமுறைப்படி பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியது.
அரசமைப்புச் சட்டம் பிரிவு 194(3) (சட்டப்பேரவை சிறப்புரிமைகள்) மற்றும் பிரிவு 19(1)(அ) (கருத்துச் சுதந்திரம்) ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து ஆராய இந்த விவகாரம் முதலில் 5 நீதிபதிகள் அமர்வுக்கும், 2004-இல் 7 நீதிபதிகள் அமர்வுக்கும் மாற்றப்பட்டது. அப்போது, தனிநபரின் அடிப்படை உரிமைகளா அல்லது பேரவையின் சிறப்புரிமைகளா, எது மேலோங்கியது என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது.
இந்த விவகாரத்தில் வெவ்வேறு வழக்குகளில் 1959 மற்றும் 1964-ஆம் ஆண்டுகளின் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் இருந்த முரண்பாடுகளைத் தீர்க்கவே இந்த பெரிய அமர்வு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையே திரும்பப் பெற்றுவிட்டதால், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என தற்போது அந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. அதேசமயம், அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டப்பேரவை சிறப்புரிமைகள் தொடர்பான சட்ட விவாதங்கள் எதிர்கால வழக்குகளுக்குத் திறந்திருக்கும் என்பதை தலைமை நீதிபதி தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.