முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை அரசு இறுமாப்பு எப்போதுதான் தீருமோ?: கருணாநிதி

கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 65 பேர் மீண்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே? என்ற கேள்விக்கு, # தமிழக மீனவர்களின்

Updated On : 1 ஆகஸ்ட் 2013, 5:55 pm IST
பகிர்:

மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கை அரசின் இறுமாப்பு எப்போதுதான் தீருமோ என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

இன்று அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில்,

* கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 65 பேர் மீண்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே? என்ற கேள்விக்கு, # தமிழக மீனவர்களின் இந்தப் பாதிப்பு குறித்து தொடர்ந்து தமிழக ஆட்சியினரும், அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப எடுத்துரைத்து வருகிறோம். அவர்களும் இதைப் பற்றி இலங்கை அரசுக்குத் தொடர்ந்து சொல்லியபோதும், ஏதாவது சாக்குபோக்குச் சொல்லி சமாளிக்கிறார்களே தவிர, இலங்கைக் கடற்படையினரின் நடவடிக் கைகள் குறைந்தபாடில்லை. அதே மனப்பான்மை யோடுதான் நேற்றையதினம் கூட செய்தியாளர்கள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம், “அரசியல் சட்டத்தின் 13-ஏ பிரிவு திருத்தத்தை அமல்படுத்த வேண்டுமென்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறதே?” என்று கேட்டதற்கு, “இந்த விஷயத்தில் எந்தச் சூழ்நிலையிலும் எனது நிலையில் மாற்றம் இல்லை. எனது நிலையை மாற்றிக் கொள்ளமாட்டேன். மாகாணக் கவுன்சில்களுக்கு போலீஸ் மற்றும் நில அதிகாரங்கள் வழங்குமாறு யாரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது.வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், நிலம் மற்றும் போலீஸ் அதிகாரம் என் கீழே இருந்தாலும், பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படும் என்று கருதவில்லை. எனவே வடக்கு மாகாணத்தில் நடைபெறுகிற மாகாண கவுன்சில் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், நிலம் மற்றும் போலீஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது” என்று தெரிவித்திருக்கிறார்.எனவே இலங்கை அரசு தாங்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்ற மனப்பான்மையோடுதான் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது. இந்திய மத்திய அரசுதான் இதைப்பற்றி உடனடியாக அக்கறையோடு நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களையும், இலங்கைத் தமிழர்களையும் காத்திட முன்வர வேண்டும்.

Advertisement

Advertisement

-என்று கூறியுள்ளார்.

மேலும்,

* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மீண்டும் உயர்த்தியிருக்கிறார்களே? என்ற கேள்விக்கு ,

# மத்திய ஆட்சியிலே இருப்பவர்களுக்கு இவ்வாறு அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது, சங்கிலித் தொடர்போல எத்தகைய பாதிப்பைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று புரியவில்லை. இதே ஜூலை மாதத்தில் 15 நாட்களுக்கு முன்பு தான் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.55 என்ற அளவிற்கு எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி அறிவித்தன. இந்த விலை உயர்வு என்பது கடந்த எட்டு வாரங்களில் ஐந்தாவது முறையாகச் செய்யப்பட்டுள்ள விலை உயர்வாகும்.

ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படும்போது, நாட்டிலே உள்ள எதிர்க் கட்சிகள் எல்லாம் அதனைக் கண்டித்து அறிக்கை விடுகின்றன. ஆனால் ஆட்சியிலே இருப்போர் அதைப்பற்றி கவலைப்படுகிறார்களா, எதிர்ப்பைக் காதில் போட்டுக் கொள்கிறார்களா என்றே தெரியவில்லை. இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதைப் பற்றிச் சிந்திக்கிறார்களா என்றும் தெரியவில்லை.

இவ்வாறு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்து வதை தி.மு.கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

- என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments