தற்போதைய செய்திகள்

கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர்அகரம் கிராமத்தில் வாணவெடி தயாரிப்புக் கொட்டகையில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில்

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர்அகரம் கிராமத்தில் வாணவெடி தயாரிப்புக் கொட்டகையில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பேர் கருகி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

 கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அருகே எல்லப்பன்பேட்டையைச் சேர்ந்தவர் பத்மாவதி,  இவர் வாணவெடி தயாரிப்பு நிறுவனத்தை ஆடூர் அகரம் கிராம எல்லையில் வயல் வெளிகளுக்கு நடுவே கடந்த 15 ஆண்டுகளாக நடத்திவருகிறார். இந்த வாணவெடி தயாரிப்புக் கூடத்தில் ஆடூர் அகரம் கீழ காலனியைச் சேர்ந்த அஞ்சாபுலி(45), எல்லப்பன்பேட்டையைச் சேர்ந்த பழனியம்மாள்(65), தேவகி(53), புவனேஸ்வரி(34), வள்ளி(32), ரகோத்தமன்(35), சிவானந்தம்(24), பாலாஜி(24) ஆகியோர் வேலை செய்துவந்தனர்.

 தேர்தலை ஒட்டி அரசியல் கட்சி பிரமுகர்களின் நிகழ்ச்சிகளில் வாணவேடிக்கை நடத்தவும், கோயில் திருவிழாக்களை ஒட்டி அதிக அளவில் வாணவேடிக்கை நடத்தவும் அதிக அளவில் ஆர்டர் வந்தததால், வாணவெடி தயாரிப்புப் பணிகளில் மும்முரம் காட்டியுள்ளார் பத்மாவதி. இதையடுத்து புதன்கிழமை காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் ஆடூர் அகரம் வாணவெடி தயாரிப்புக் கொட்டகைக்கு பணிக்கு வந்துள்ளனர்.

3 பேர் சாவு, 5 பேர் காயம்:

 அதன்படி அனைவரும் கொட்டகையில் அமர்ந்து கந்தகத் துகளையும், கரித்துகளையும், கலந்து உரளில் இடித்துக் கொண்டிருக்கையில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதில் அருகிலிருந்த வெடி மருந்து துகள்களும், காயவைக்கப்பட்டிருந்த வாணவெடிகளும் தீ பிடித்து, வெடிக்கத் துவங்கின. இதில் கொட்டகை வெடித்து தரைமட்டமானது. வள்ளி என்பவர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்தார்.

 பழனியம்மாள் மற்றும் அஞ்சாபுலி உள்ளிட்ட அனைவரும் தீயில் சிக்கி போராடிக் கொண்டிருந்தனர். வயல் வெளியின் நடுவே இருந்ததால் வெடி சத்தம் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு யாரும் வர முடியவில்லை. பின்னர் சிறிதுநேரம் ஊர்மக்கள் ஓடிவந்து தீயில் சிக்கியவர்களைக் காப்பாற்றி, 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 இதில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அஞ்சாபுலியும், பழனியம்மாளும் இறந்தனர்.எஞ்சியவர்கள், குறிஞ்சிப்பாடி மருத்துவமனையிலிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

 இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். தீ விபத்து சம்பவத்தை நேரில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மனோகரன் மற்றும் கோட்டாட்சியர் ஷர்மிளா, ஆகியோர் வெடிமருந்து தயாரிப்புக்கு பெறப்பட்ட உரிமத்திற்கான ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவை முறையாக இருந்தன என தெரிவித்தனர்.
 இதைத்தொடர்ந்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வெடிவிபத்துத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2006-லும் விபத்து:

 இந்நிலையில் வெடிவிபத்து தகவலறிந்த வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பத்மாவதி, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதாகக் கூறி வடலூர் ஆரம்ப சுகாதார நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இவரது கணவர் சரவணன் முதன்முதலில் இந்த நிறுவனத்தை 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நடத்திவந்தார்.

 கடந்த 3 ஆண்டுகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதைத் தொடர்ந்து, பத்மாவதி வெடிபொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு இடி தாக்கியதில் இந்த நிறுவனத்தில் தீ விபத்து நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

கட்சியினர் ஆறுதல்:

 மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் டி.ஆறுமுகம், ஒன்றிய செயலர்  எஸ்.எஸ்.ராஜ் உள்ளிட்டோர் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டும், இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

 காயமடைந்தவர்களை கடலூர் அரசு மருத்துவமனையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியே சந்தித்து ஆறுதல் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT