விபத்தில் காயமடைந்தவருக்கு நீதிமன்ற விதித்த நஷ்டஈட்டுத் தொகையை வழங்காததால் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
நாமக்கல் புதன்சந்தை அருகே செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த மோகனின் மகன் ரஜினிகாந்த்(35) தனியார் நிறுவனர். இவர் கடந்த 2012 ஏப்ரல் 24-ம் தேதி புதன்சந்தையில் இருந்து செல்லப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து புதன்சந்தை நோக்கிச் சென்ற சேலம் கோட்ட அரசு பேருந்து மோதியதில் ரஜினிகாந்த் பலத்த காயமடைந்தார். பின்னர், மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.
தொடர்ந்து அவர் நஷ்டஈடு கோரி நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த்துக்கு ரூ.3,66,672 நஷ்டஈடு வழங்கிட சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டு 2013 ஜூலை 29-ம் தேதி தீர்ப்பளித்தது.எனினும், உரிய காலத்தில் அந்த தொகையை செலுத்தப்படாததால் ரஜினிகாந்த், நீதிமன்றத்தில் நிறைவேற்றும் மனுத் தாக்கல் செய்தார். அதன்மீது விசாரணை நடத்திய நீதிபதி சந்திரா, சேலம் கோட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.3.83 லட்சம் நஷ்டஈடு வழங்கிட ஏப்ரல் 21-ம் தேதி உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், ஆட்டையம்பட்டியில் இருந்து நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் கோட்ட அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால், நாமக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.