தூத்துக்குடி மாவட்டம், கிளாக்குளத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகளான 7 ஆம் வகுப்பு மாணவி புனிதா (13) கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி தாதன்குளம் ரயில் நிலையம் அருகே பாலியல் பலாத்கார முயற்சிக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் ரயில் நிலையம் அருகே முள்புதர் பகுதியில் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த செய்துங்கநல்லூர் போலீஸார் மணியாச்சி அருகேயுள்ள பாறைக்குட்டத்தைச் சேர்ந்த சுப்பையாவை கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள 28 பேரிடம் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இதற்கிடையே, மகளிர் நீதிமன்ற நீதிபதி கமலாவதி மாறுதலில் சென்றுவிட்டதால் முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி பால்துரை முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சாட்சிகள் விசாரணை, இருதரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி தீர்ப்புவழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, குற்றம்சுமத்தப்பட்ட சுப்பையாவை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
நீதிபதி பால்துரை இருக்கைக்கு வந்ததும் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் நான் குற்றவாளி இல்லை என்றும் சுப்பையா கூறினார்.
இருப்பினும், தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய நீதிபதி பால்துரை மாணவியை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலியல் பலாத்காரத்துக்கு முற்பட்டதற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபாரமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து, சுப்பையாவை போலீஸார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.