அருப்புக்கோட்டை அருகே பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை ஆட்டோவில் கடத்திச் சென்றதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஆட்டோவில் இறங்கும் போது தப்பியோடியவர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் பகுதிக்கு கன்னிசேரிபுதூர் பகுதியிலிருந்து வாகனங்களில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீஸார் சுக்கிலநத்தம்-வெள்ளையாபுரம் சாலையில் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது, அவ்வழியாக வண்டிப்பாதையில் வந்த ஆட்டோவை வழிமறித்து பின்புறம் சோதனையிட்டனர். அதில், அனுமதியில்லாமல் கருந்திரி கட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. உடனே ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை செய்வதற்கு முன்புறம் பகுதிக்கு வந்த போது ஒருவர் சோளக்காட்டிற்குள் தப்பியோடினார். அதையடுத்து மற்ற இரண்டு பேர்களையும் பிடித்து விசாரணை செய்த போது சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன்(55), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாலசுப்பிரமணி(35) மற்றும் தப்பியோடியவர் சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த ரத்தினகுமார் என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக வேல்முருகன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ரத்தினகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் அதிலிருந்த 900 கருந்திரி கட்டுக்கள் ஆகியவைகளை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.