விவசாயிகளின் நலன்காக்கும் முதல்வர் கர்நாடகத்திற்கு தேவை என்று முன்னாள் பிரதமர் தேவகௌடா தெரிவித்தார்.
பெங்களூரு, கெங்கேரி துணைநகரில் ஞாயிற்றுக்கிழமை எலஹங்கா சட்டப்பேரவை தொகுதி மஜத செயல்வீரர் கூட்டத்தை குத்துவிளக்கேற்றிதொடக்கிவைத்து அவர் பேசியது: கர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்துவருகிறார்கள். கடந்த 4 மாதங்களில் மட்டும் 213 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பயிர்க்கடனை அடைக்க முடியாமல், பயிர் இழப்பை ஈடுகட்டமுடியாமல் என்று பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை மாநில அரசு வழங்கவில்லை.
தற்கொலை முடிவுக்கு தள்ளப்படாத நிலை விவசாயிகளுக்கு உருவாக வேண்டும். நிலத்தில் தான் விவசாயம் செய்ய முடியும். ஆகாயத்தில் அல்ல, எனவே விவசாயிகளிடம் கனவுகளை விற்காமல், உண்மையான செயல்பாடுகளை விதைக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் நிம்மதியுடனும், மன தைரியத்துடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும். கர்நாடகத்தில் தற்போதுள்ள அரசும் சரி, முதல்வரும் சரி விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்களின் நலன்களுக்கு கிஞ்சிற்றும் அக்கறை காட்டாதவர்களாக இருக்கிறார்கள். விவசாயிகள் விவகாரத்தில் மாநில அரசு இரட்டைநிலைப்பாடு கொண்டுள்ளதோடு, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிவழங்காமல் நாடகமாடிவருகிறது. கர்நாடகத்தில் விவசாயிகளின் நலன்காக்கும் முதல்வர் தேவை. அப்போதுதான் விவசாயிகளின் நிலைமை சீரடையும்.
கருத்துவேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்த்து செயலாற்றினால் பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் மஜத வெற்றிபெறுவது உறுதி. நான் முதல்வராக இருந்தகாலக்கட்டத்தில் தான் அனைத்து ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. குமாரசாமி முதல்வராக இருந்தபோது, மக்களின் குறைகளை களைய முற்பட்டார். இதுபோன்ற சாதனைகளை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் மஜத மாநிலத்தலைவருமான குமாரசாமி, எம்எல்சி இ.கிருஷ்ணப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.