விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா கைது
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மன், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பிறகு ராசபட்சவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய அரசு வாகனத்தை திருப்பி அளிக்காதது மற்றும் வாகனம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளிக்குமாறு நிதித்துறை குற்றவியல் புலனாய்வு அமைப்பு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊழல் புகாரின் விசாரணைக்காக ஆஜராக வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்டுள்ள கருணா அம்மான் இன்று பிற்பகல் கொழும்பு மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
2004-இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முக்கிய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் அதிலிருந்து விலகினார்.
கருணாவின் பிரிவானது உலகத் தமிழர்களாலும் வடகிழக்கில் வாழும் தமிழர்களாலும் நம்பமுடியாத செய்தியாக இருந்தது.
ஒரு கட்டத்தில் கருணா விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடண் சென்று தன் நிலையை கூறி மன்னிப்பு கோரவிருந்தார். ஆனால், கிழக்கிலிருந்து மற்றைய தளபதிகள் தடுத்தி நிறுத்தினர். இதனால் குழப்ப நிலையில் இருந்த கருணா, தனது நிலையை டொக்டர் அன்ரி என அழைக்கப்படும் பத்மலோயினி கரிகாலனிடம் கூறி கவலைப்பட்டார்.
இந்தநிலையில் வன்னியில் தளபதிகள் கருணாவை கொல்ல வேண்டுமென கொதித்தெழுந்தனர். ஆனால், சற்று வித்தியாசமான மனநிலையில் இருந்த பிரபாகரன், இன்றைக்கு கருணா வந்தாலும் அவனை மன்னிப்பேன் என்று கூறினார்.
ஏனெனில், இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது புலிகள் ஒரு கட்டத்தில் ஆயுத தளவாடங்கள் இல்லாத வேளையில், கருணா தன்னிடம் இருந்த ஆயுதங்களை வன்னிக்கு அனுப்பி வைத்து தலைவரின் கரங்களை பலப்படுத்தியதை பிரபாகரன் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
கருணாவின் பிரிவைத் தொடர்ந்து விடுதலை புலிகளுக்கும் கருணாவின் குழுக்களுக்குமிடையே பல்வேறு சண்டைகள் இடம்பெற்றன. கிழக்கில் புலிகள் ராணுவத்திற்கு எதிரான தாக்குதலைவிட கருணாவின் குழுவிற்கு எதிராக தாக்குதல் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், கருணா அணியிலிருந்த உறுப்பினர்கள் நேரடியாக ராணுவத்துடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராக போரில் இறங்கினர்.
இதைத்தொடர்ந்து மஹிந்த ராசபட்சவுடன் இணைந்து கொண்டார் கருணா அம்மன். கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த பின்னர், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைப் படைகளால் தோற்கடிக்கப்பட வழிவகுத்தது.
இதையடுத்து கருணா அம்மனுக்கு ராசபட்ச ஆட்சியில் அமைச்சராகவும், இலங்கை சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்களும் வழங்கப்பட்டது.
கருணாவின் பிரிவைத் தொடர்ந்து புலிகளால் எந்தவொரு வெற்றிகரமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிந்தது என்பதுதான் உண்மையா?
கருணா லண்டனுக்கு 2007-ஆம் ஆண்டு வந்த போது, அவர் அடையாள ஆவண மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.