தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு:  நெல்லையில் 2 ஆவது நாளாக குவிந்த மாணவர்கள், இளைஞர்கள்!

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, 2 ஆவது நாளாக புதன்கி்ழமை மாணவர்கள், இளைஞர்கள் குவிந்தனர். அரசியல் கட்சியினர் பங்கேற்க போராட்டக்குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க  வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தொடங்கிய போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரில் ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய இப்போராட்டத்துக்கு 2 ஆவது நாளாக புதன்கிழமை காலையில் இருந்தே இளைஞர்கள், மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பாளையங்கோட்டை பகுதியிலுள்ள கலைக் கல்லூரி மாணவர்களும் இப்போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

கல்லூரிகளில் பிற்பகலில் வகுப்பு முடிந்ததும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் மைதானத்தில் குவிந்தனர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர். 

நாம் தமிழர் கட்சியினர், முகநூல் நண்பர்கள் குழுவினர் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு

தண்ணீர் பாக்கெட், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. சேரன்மகாதேவியில் ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு வெளியே நின்று கோஷம் எழுப்பினர். பின்னர், வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல், பாவூர்சத்திரம், தென்காசியிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு: இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய மாவட்ட திமுக செயலர் மு. அப்துல்வஹாப் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.பி.எம். மைதீன்கான், ஏ.எல்.எஸ். லட்சுமணன், நிர்வாகிகள் வ.உ.சி. மைதானத்துக்கு வந்தனர்.

இதில் அரசியல் கட்சியினர் பங்கேற்க வேண்டாம் என போராட்டக்குழுவினர் தெரிவித்ததை அடுத்து அவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து திரும்பிச் 
சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT