தற்போதைய செய்திகள்

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும்: கே.எஸ் அழகிரி 

DIN


சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதோடு, அதற்கான நிதியையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதாரண ஏழை, எளிய, பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து, ஆறாவது வகுப்பு வரை படித்து காங்கிரஸ் கட்சியில் சாதாரண தொண்டராக சேர்ந்து, கடுமையான உழைப்பின் மூலம் 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கர்மவீரர் காமராஜர். 1954 முதல் 1963 வரை ஒன்பதரை ஆண்டுகாலம் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்து பொற்கால ஆட்சி நடத்தியவர். அவரது ஆட்சிக் காலத்தில் தான் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது. 

தேசிய அரசியலில் பிரதமர் பண்டித நேருவிற்கு உறுதுணையாக 1964 இல் இருந்து நான்கு ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் காமராஜர். நேரு மறைவிற்கு பிறகு தேசிய அரசியலில் இரண்டு பிரதமர்களை மூன்றுமுறை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய சாதனையை படைத்தார். 

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் முதல்வராக இருந்த போது, கல்வி என்பது உயர் வகுப்பினருக்கு மட்டுமே கிடைக்க கூடிய நிலையில் இருந்தது. தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல ஏழை, எளியவர்களுக்கு இலவச கல்வியும், மதிய உணவும் வழங்கி, கல்வியில் புரட்சி செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். இதை செய்ததற்காக தந்தை பெரியார் அவர்களால் கல்வி வள்ளல் என்று அழைக்கப்பட்டார். 

தமிழகத்தில் கல்வித் துறையில் மிகப்பெரிய புரட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரை போற்றுகிற வகையில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் 24 மே 2006 அன்று தமிழக சட்டப் பேரவையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ‘கல்வி வளர்ச்சி நாளாக” கொண்டாட வேண்டுமென்று மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்றினார். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து பள்ளிகளிலும் பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி விழாவை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு நிதியிலிருந்து ரூபாய் 1 கோடியே 47 லட்சம் ஒதுக்கப்பட்டது. 2006 முதல் ஒவ்வொரு ஆண்டும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு, பெருந்தலைவரைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்கிற மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டது. 

ஆனால், அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாமல் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பெருந்தலைவர் பிறந்ததின விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதற்கு அ.தி.மு.க. அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடவடிக்கை ஏற்பட்டு வருகிறது. 

இத்தகைய போக்கை உடனடியாக நிறுத்தி, வருகிற ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதோடு, அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். 

இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில் பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு அதிமுக அரசு செய்கிற மிகப்பெரிய துரோகமாகவே கருதப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT