தற்போதைய செய்திகள்

பிடிஏ ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை அரசு வழங்கும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

DIN

திருப்பூர்: பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை அரசு வழங்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இரு அரசு பள்ளிகளின் புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளி, கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

படிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கருதி அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பள்ளி, கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி வழங்கிய வரலாறு தமிழகத்தில் மட்டும்தான் நிகழ்ந்துள்ளது. அதே போல் உயர்கல்விக்கும் சேர்ந்து ரூ.41 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. நிர்வாக திறன் மேம்பாட்டில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத இடத்தைப் பிடித்த முதல் மாவட்டமாகத் திகழ்கிறது. அதே போல, 10 ஆம் வகுப்பு தேர்விலும் அதிக இடத்தைப் பிடித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வானது வரும் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரையில் நடைபெறுகிறது. இதில், 15 நிமிடம் மாணவர்கள் கேள்வித்தாள்களைப் படித்துப் பார்த்து தேர்வு எழுத தயார்படுத்திக் கொள்ள வழங்கப்படுகிறது. தற்போது மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தேர்வை நிகழாண்டு 8, 16,359 மாணவ, மாணவிகளும், பிளஸ் 1 தேர்வை 8,26,119 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளனர். பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வை 9,45,006 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 

தேர்வுகள் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதே போல், மாணவர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் தேர்வு மையங்கள் கூட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 1,159 மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை அரசு வழங்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் ஏ.நடாரஜன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT