முக்கியச் செய்திகள்

இவர்களில் யார் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர்?

கார்த்திகா வாசுதேவன்

டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்தில் தொடங்கி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகிர், ஹுசைன், வி.வி.கிரி, முகமது ஹிதயதுல்லா, பஹ்ருதீன் அலி அஹமது, பாசப்ப தானப்பா, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட் ராமன், சங்கர் தயாள் ஷர்மா, கே.ஆர்.நாராயணன், எ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரதிபா படீல், பிரணாப் முகர்ஜி ஈறாக இதுவரை குறிப்பிடத் தக்க தலைவர்களை குடியரசுத் தலைவர்களாகக் கண்டிருக்கிறது நமது இந்தியா. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த ஜூன் மாதத்தோடு நிறைவு பெறுவதை ஒட்டி அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை தற்போது இந்தியா எதிர் நோக்கியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நாட்டின் நிர்வாக அதிகாரத்தில் என்ன தான் பிரதமருக்கு அதிகாரங்கள் கொட்டிக் கிடந்தாலும் கூட குடியரசுத் தலைவர் பதவியின் முக்கியத்துவமும் அதிகமே! 

குடியரசுத் தலைவர் பதவிக்கான அதிகாரங்கள்...

நெருக்கடியான காலங்களில் ஆட்சியை கலைக்கும் அதிகாரம், பாராளுமன்ற அமர்வைக் கலைக்கும் அதிகாரம் போன்றவை குடியரசுத் தலைவருக்கு மட்டுமேயான தனித்த அதிகாரங்கள். அதே போல அவசர கால சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அவசியம் எனும் அரசியல் நெருக்கடி மிகுந்த காலங்களில் இவர் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானதாக இருக்கும். அது மட்டுமல்ல தொங்கு நாடாளுமன்றம் அமையும்போது குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானதாக இருக்கும். இது போன்ற காரணங்களால் தான் தனக்கு சாதகமான ஒருவரை குடியரசுத் தலைவராக கொண்டு வருவதற்கு ஆளும் கட்சிகள் படாத பாடு படுகின்றன.

இப்போது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் எப்படி நடைபெறுகிறது எனக் காண்போம்...

இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி என்பது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கக் கூடிய பதவியே. ஆனால் இதில் மக்கள் நேரடியாக வாக்களிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் இதில் வாக்களிப்பார்கள். நியமன எம்பிக்களும், எம் எல் ஏக்களும் வாக்களிக்க முடியாது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்த 4114 எம்.எல்.ஏக்களும், 776 எம்.பிக்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியும், உரிமையும் உடையவர்களாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி அல்லது எம்.எல். ஏ வின் ஒரு வாக்கு மதிப்பு என்பது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி அவர் சார்ந்துள்ள மாநிலத்தின், தொகுதியின் மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு எம்.பி மற்றும் எம்.எல் ஏக்களும் வாக்குகள் நிர்ணயிக்கப் படுகின்றன.

நடப்பில் இப்போதைய இந்திய மாநிலங்களில் இந்த மொத்த எம்.பி. எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு என்பது மொத்தம் 10,98, 882 இதில் 5,49,442 வாக்குகளைப் பெற்றவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் வென்றவர்களாகக் கருதப் படுவார்கள். இந்நிலையில் தற்போது 5,32,037 வாக்குகள் முன்னதாகவே பாஜக வசம் உள்ளது. ஆகவே பாஜகவுக்கு இனி தேவைப்படுவது 14,405 வாக்குகள் மட்டுமே!

பாஜக வுக்கான வெற்றி வாய்ப்பு...

இப்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் இல்லாத பிரதான மாநிலக் கட்சிகளான அதிமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம் இவற்றில் ஒன்று பாஜக வை ஆதரித்தாலே போதும் பாஜக வின் வெற்றி உறுதியாகி விடும். இதில் 

இவர்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முன்னரே பாஜக வை ஆதரிப்பதாக கூறி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதிகரித்து வரும் உட்கட்சிப் பிளவுகளால் அதிமுக இப்போது பாஜக வை ஆதரித்தாக வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. எனவே தாங்கள் விரும்பும் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கிப் பார்க்கும் வாய்ப்பு தற்போது பாஜக வுக்கு கிடைத்திருக்கிறது என்பது நிதர்சனம். சூழல் இப்படி இருந்த போதிலும் பாஜக இன்னும் தனது குடியரசுத் தலைவர் வேட்பாளரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆயினும் இன்னின்னவர்கள் தான்  பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப் படலாம் எனும் ஒரு யூகம் மக்களிடையே உலவுகிறது. அந்த அடிப்படையில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் இம்முறை குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக யாரெல்லாம் முன்னிறுத்தப் படலாம் எனப் பார்ப்போம்.

பாஜக பரிந்துரைக்கவிருக்கும் வேட்பாளர்கள்...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்...

ஜார்கண்ட் மாநில கவர்னரான திரெளபதி முர்மு... 

பாஜக இவரை குடியரசுத் தலைவராக அறிவிக்கும் பட்சத்தில் திரெளபதி முர்மு ஒதிஷா பழங்குடி இனப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற வகையில் ஒதிஷாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் முழு ஆதரவும் பாஜக வுக்கு கிடைக்கலாம்.

பாஜக சார்பில் இந்த இருவரது பெயர் தான் பிரதானமாக முன் வைக்கப் படுகிறது. இவர்கள் தவிர மூத்த தலைவர் அத்வானி பெயரும் முணுமுணுக்கப் பட்டு வருகிறது. 

காங்கிரஸ் சார்பாக முன்னிறுத்தப் படும் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளர்கள்;

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்: சரத் பவார் மராட்டியர் என்பதாலும் இதற்கு முன்பு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் இரண்டு முறை சிவ சேனை காங்கிரஸ் முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கே ஆதரவு தெரிவித்திருக்கிறது எனும் வகையிலும் சிவ சேனையின் ஆதரவு காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரான சரத் பவாருக்கு கிடைக்கலாம் என எதிர்பார்ப்பிருக்கிறது.

இவரைத் தவிர;

முன்னாள் சபாநாயகர் மீரா குமார்

ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ்

மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி

உள்ளிட்டோரின் பெயரும் காங்கிரஸ் சார்பில் அனுமானிக்கப் படுகிறது. இவர்களில் ஒருவர் தான் அடுத்த இந்திய குடியரசுத் தலைவராகும் கெளரவத்தைப் பெறப் போகிறார். யாரந்த ஒருவர் என்பதை இனி வரும் நாட்களின் அரசியல் மாயஜாலங்கள் தீர்மானிக்கும்.

இதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடைய அதிமுகவின் மொத்த வாக்கு எண்ணிக்கை என்பது 59,224. இந்த வாக்குகள் அப்படியே மொத்தமாக பாஜகவுக்கு ஆதரவாக இருக்குமெனில் பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருடைய ஆதரவையும் நாடத் தேவையில்லை. இப்போது சாமானிய இந்தியக் குடிமக்களாகிய நம்மால் ஆனது... குடி அரசுத் தலைவருக்கான தேர்தலில் என்னவெல்லாம்  நடக்கப் போகிறது என்பதை அமைதியாக வேடிக்கை பார்ப்பது மட்டுமே!

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT