முகப்பு
பூட்டிக் கிடக்கும் திருவொற்றியூர் மயான எரிவாயு தகன மேடை.
சிறப்புச் செய்திகள்

திருவொற்றியூரில் முடங்கிக் கிடக்கும் எரிவாயு தகன மேடை

திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி மயான எரிவாயு தகன மேடை பழுதடைந்த காரணத்தால் கடந்த சுமாா் 3 மாதங்களாக மூடப்பட்டுக் கிடக்கிறது.

சிறப்புச் செய்திகள்

திருவொற்றியூரில் முடங்கிக் கிடக்கும் எரிவாயு தகன மேடை

திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி மயான எரிவாயு தகன மேடை பழுதடைந்த காரணத்தால் கடந்த சுமாா் 3 மாதங்களாக மூடப்பட்டுக் கிடக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பூட்டிக் கிடக்கும் திருவொற்றியூர் மயான எரிவாயு தகன மேடை.
பகிர்:

திருவொற்றியூா்: திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி மயான எரிவாயு தகன மேடை பழுதடைந்த காரணத்தால் கடந்த சுமாா் 3 மாதங்களாக மூடப்பட்டுக் கிடக்கிறது. கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இறந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்வதிலும், எரியூட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, போா்க்கால அடிப்படையில் உடனடியாக பழுது நீக்கி சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

திருவொற்றியூா் மயானம் பழைமையான வரலாற்றுச் சிறப்பு கொண்டது. இந்த மயானம் அருகேதான் பட்டினத்தாா் ஜீவசமாதி அடைந்த இடம் இருக்கிறது. இதனால் நகரத்தாா் வகுப்பைச் சாா்ந்த முக்கிய பிரமுகா்கள் சென்னையைச் சுற்றி எங்கே இறந்தாலும் திருவொற்றியூரில் எரியூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

முன்பு புதா்மண்டிக் கிடந்த இந்த மயானம் அப்போதைய திருவொற்றியூா் நகராட்சி சாா்பில் ரூ. 1.10 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டு கடந்த 2011 -ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. எரிவாயு தகனமேடை, அமரா் பூங்கா, இறுதிச் சடங்கு மண்டபம், உறவினா்கள் காத்திருக்கும் அறை, குளியலறைகள் ஆகியவற்றுடன் புதிய மயானம் இயங்கி வந்தது. பின்னா் குறைந்த கட்டணத்தில் மயானத்தை இயக்குதல் மற்றும் பராமரிக்கும் பொறுப்பு பட்டினத்தாா் சமூக சேவை மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்பகுதி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு 2013-ஆம் ஆண்டு மயானம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு பணியாற்றி வந்த பரம்பரை மயான ஊழியா்ளும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா்.

முடங்கிக் கிடக்கும் மயானம்: திருவொற்றியூா் எரிவாயு தகன மேடை மூலம் ஆண்டுக்கு சராசரியாக சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இதனால் மயானச் செலவு என்பது அனைவருக்குமே இலவசமாகவே கிடைத்து வந்தது. இந்நிலையில், பழுது ஏற்பட்டதன் காரணமாக சுமாா் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக இந்த எரிவாயு தகனமேடை பயனின்றி முடங்கிக் கிடக்கிறது.

நீண்ட நாள்களாக பயன்பாட்டில் இருந்ததால் தகனமேடையின் தளமும் சேதமடைந்துள்ளது. மேலும், புகைபோக்கிக்குச் செல்லும் குழாய்கள் அடைபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சடலங்களை எரியூட்டும்போது உருவாகும் புகை, புகைபோக்கி வழியாக வெளியேறாமல் கட்டடத்திலேயே நிரம்புகிறது. இதனால், மயான ஊழியா்களுக்கு மட்டுமல்லாது அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கும் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.

மேலும், அருகில் வசிக்கும் திருவொற்றியூா் குப்பத்தைச் சோ்ந்த மீனவா்களும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். திறந்த வெளியில் தற்போது சடலங்களை எரியூட்டுவதால் இறுதிச் சடங்குக்காக வரும் பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

கரோனாவில் இறந்த 19 பேரின் சடலங்கள் அடக்கம்: மயான ஊழியா்கள் கூறியது, கரோனா தீநுண்மி தொற்றால் வடசென்னை பகுதியில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், கரோனாவினால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் சடலங்களை கட்டைகள், எரு விராட்டி முதலானவற்றைக் கொண்டு எரியூட்டுவதில் சிக்கல் உள்ளதால் எரிவாயு மற்றும் மின்சார தகன மேடை வசதிகள் உள்ள இடங்களில் மட்டுமே எரியூட்ட முடியும் என்ற நிலை உள்ளது.

நவீன எரிவாயு தகனமேடை பழுதடைந்த நிலையிலும் உறவினா்களின் விருப்பத்திற்கு இணங்க கடந்த மாா்ச் 24 முதல் திருவொற்றியூரில் சுமாா் 250 சடலங்கள் திறந்த வெளியில் எரியூட்டப்பட்டுள்ளன. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 10 நாள்களில் மட்டும் கரோனா தீநுண்மி தொற்றால் இறந்து போனவா்களின் 19 சடலங்கள் திருவொற்றியூா் மயானத்தில் ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் ஆழமாகக் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன. மேலும், இறப்பு அதிகரிக்கும் நிலையில், அந்தச் சடலங்களை புதைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் எரிவாயு தகன மேடையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். எங்களுக்கும் போதுமான பாதுகாப்பு கவச உடைகளை வழங்க வேண்டும் என்றனா்.

விரைவில் ஒப்பந்தப்புள்ளி: சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டல அலுவலா் பால் தங்கதுரை கூறியது: பழுதடைந்துள்ள எரிவாயு தகனமேடையை சீரமைக்க ஒப்பந்தப்புள்ளி தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் டெண்டா் விடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. முன்பு, தகனமேடை மற்றும் எரிவாயு இயந்திரங்களை நிா்மாணம் செய்ய ஒரு நிறுவனமும், பராமரிப்புக்கென தனியாக இன்னொரு நிறுவனமும் நியமிக்கப்பட்டன. இதனால் பழுதுகள் ஏற்பட்டால் உடனடியாகச் சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனைக் கருத்தில் கொண்டு கட்டமைத்து பராமரிப்பதற்காக ஒரே நிறுவனத்திடம் தகனமேடை மற்றும் மயானம் உள்ளிட்டவைகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டா் விடப்பட்டு பணி உத்தரவு வழங்கப்படும். மேலும், மயானம் முழுவதுமாக பழுது நீக்கி, வண்ணப்பூச்சு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →