முகப்பு
சிறப்புச் செய்திகள்

தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!

தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகிவிட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 5:43 am IST
பகிர்:

தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகிவிட்டது. இந்த நிலையில், மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிதாக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தின் பல பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. தொடரும் மின் தடையால் பல இடங்களில் மக்கள் சாலை மறியல், மின்வாரிய அலுவலக முற்றுகை எனப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் வீட்டு உபயோகம், விவசாயம், வணிகம், விசைத்தறி, கைத்தறி மற்றும் குடிசைகள் என மொத்தம் 3,52,80,929 மின் இணைப்புகள் உள்ளன. இதில் கோடைக்கால மின் தேவை (ஏப்ரல்-ஜூன்) 21,000 மெகாவாட்டைத் தாண்டுகிறது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான அணுமின், நீர்மின், நிலக்கரி, எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (சூரியசக்தி, காற்றாலை) மூலம் மொத்தம் 47,238 மெகாவாட் நிறுவுத்திறன் கொண்ட மின் உற்பத்தி ஆதாரங்கள் உள்ளன. இதில் மத்திய, மாநில அரசுகளுக்குரிய 19,444 மெகாவாட் நிறுவுத்திறனில் இருந்து, கோடை மற்றும் குளிர்கால ஏற்ற இறக்கங்களுடன் 12,000 முதல் 13,500 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது.

Advertisement

Advertisement

பற்றாக்குறையைப் போக்க தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து 3 முறைகளில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது. அதாவது, நீண்டகால ஒப்பந்தம் - யூனிட் ரூ.6 முதல் ரூ.7,

நடுத்தரகால ஒப்பந்தம் - யூனிட் ரூ.7 முதல் ரூ.9, குறுகியகால ஒப்பந்தம் - யூனிட் ரூ.9 முதல் ரூ.14 வரை என பெறுகிறது. இந்தக் குறுகியகால ஒப்பந்தங்களால் மின்வாரியத்துக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டாலும், தடையில்லா மின்சாரத்தை உறுதிப்படுத்த இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

அமைச்சர் விளக்கம்: மின்தடைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கள நிலைமை குறித்து தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தின் "மின்தேவை 21,000 மெகாவாட்டைத் தாண்டினாலும் தேவையான மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது திட்டமிட்ட மின்வெட்டோ அல்லது நிர்வாகக் குறைபாடோ அல்ல. வெயில் தாக்கத்தால் ஏற்படும் அதிக சுமையால் மின்மாற்றிகள் பழுதாவது, நிலத்தடி கேபிள்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதே காரணம். மேலும், முந்தைய ஆட்சியின் தவறான கொள்கை முடிவுகள், பராமரிப்பின்மை மற்றும் மர்ம நபர்கள் மின்மாற்றிகளின் ஃபியூஸ் கேரியர்களைத் திருடுவதால் ஏற்படும் மின் தடையை சிலர் அரசியலாக்குகின்றனர் என்கிறார் அமைச்சர்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது, 2016-இல் 14,648 மெகாவாட், 2020-இல் 16,846 மெகாவாட், 2023-இல் 19,387 மெகாவாட், 2025-இல் 20,830 மெகாவாட் ஆக இருந்துள்ளது. 2026-இல் 21,000 மெகாவாட்டைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பழைய மின்கட்டமைப்பை வைத்தே இந்த விநியோகம் சமாளிக்கப்படுகிறது. உள்ளூர் அளவிலான ஜம்பர் கட், மரக்கிளைகள் மின்கம்பியில் படுதல், ஓவர்லோடு போன்ற கோளாறுகளைச் சரிசெய்ய 24 மணி நேரக் களப்பணிக் குழுக்கள், தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் "மின்னகம்' சேவை மூலம் போதிய உதிரிபாகங்களுடன் பணிகள் நடக்கின்றன.

கடுமையான உத்தரவு: மின் தடையைத் தடுக்க ஊழியர்கள் மழைக்காலத்தில் கடைப்பிடிக்கும் விழிப்புணர்வு போல செயல்பட வேண்டும் என்று தமிழக மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மின்தடைக்கான காரணம், சீராகும் நேரம் போன்றவற்றை முறையாகப் பகிர வேண்டும் என்றும், சமூக வலைதளங்களிலோ அல்லது மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ தகவல் தெரிந்த பிறகு உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் போக்கை ஏற்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

65,921 காலிப்பணியிடங்கள்: இதேவேளையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலர் ஜெயசங்கர் மின் தடைக்கான இன்னொரு பக்கத்தை முன்வைக்கிறார். "2024, 2025 ஆம் ஆண்டுகளைப் போன்றேதான் இந்த ஆண்டும் மின் தடைகளும் நுகர்வும் உள்ளன. ஆனால் இது தற்போது மிகைப்படுத்தப்பட்டு அரசியலாக்கப்படுகிறது. வாரியத்தில் உள்ள 1.40 லட்சம் பணியிடங்களில் 65,921 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 46,000 பணியிடங்கள் கள உதவியாளர் மற்றும் கம்பியாளர் பணியிடங்களாகும். கடந்த 5 ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால் காலாண்டு மற்றும் கோடைகாலப் பராமரிப்புப் பணிகள் முறையாக நடக்கவில்லை. இதுவே தற்போதைய தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு முக்கியக் காரணம். 20 மணி நேரத்திற்கும் மேலாகப் பணியாற்றும் ஊழியர்களின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம் என்கிறார் அவர்.

தீர்வு என்ன?: தமிழகம் இன்னும் 2008-2011 காலகட்டத்திலிருந்த கடுமையான மின் பற்றாக்குறை நிலைக்குச் செல்லவில்லை. இருப்பினும், மின்தேவை வேகமாக உயரும் சூழலில் புதிய உற்பத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படா விட்டால் எதிர்காலம் சவாலாக மாறும். "மின் மிகை மாநிலம்' என்ற அந்தஸ்தைத் தக்கவைக்க, காலிப்பணியிடங்களை நிரப்புவதும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுமே நிரந்தரத் தீர்வாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments