முகப்பு
சிறப்புச் செய்திகள்

அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு! காரணம் என்ன?

திருத்தங்கல் அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்தது குறித்து வலுக்கும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் பற்றி...

Updated On : 7 ஜூலை 2026, 2:28 pm IST
திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்தபோது... - X
பகிர்:

அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்ததற்கு அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; எனினும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தரப்பிலிருந்து இதுவரை கருத்துத் தெரிவிக்காதது பற்றியும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா நடத்திய ஆய்வு

தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூலை 3 ஆம் தேதி, சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

பள்ளியில் சமையலறை, கழிப்பறைகளைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள பிரச்னைகளை சரிசெய்யவும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கணினி அறிவியில் ஆய்வகத்திலும் ஆய்வு செய்தார். அங்கு கணினிகள் மூடப்பட்டும் தூசி படிந்திருந்தது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக பள்ளியில் வகுப்பறைக்குச் சென்று மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப, அந்த மாணவி பதில் சொல்லத் தயங்கிய நிலையில், 'ஆங்கிலத்தில் ஒரு எளிய கேள்விக்குக்கூட பதில் அளிக்கத் தெரியவில்லை' என்று கூறியதுடன் ஆசிரியரை உரையாடுமாறு கூறுகிறார். ஆசிரியர் கேள்வி கேட்டதும் அந்த மாணவி பதிலளிக்கிறார்.

பின்னர் 'கடைசி பெஞ்ச்சில் உள்ள மாணவர்களிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்புமாறு ஆசிரியரிடம் கூறுகிறார்.

ஆங்கில வகுப்புகளை மேம்படுத்துமாறும் மாணவிகள் புரிந்து படிக்கும் வகையில் பாடங்களை நடத்தவும் ஆசிரியரிடம் கீர்த்தனா வலியுறுத்தினார்.

வலுக்கும் எதிர்ப்பு!

முதலில், அந்த மாணவியிடம் சற்று கடுமையாகவே அதுவும் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி, மாணவியின் தன்னம்பிக்கையைச் சிதைத்ததாகவும் அரசுப் பள்ளிகளின் தரத்தைக் குறைத்ததாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதாவது எந்தவொரு குழந்தையுமே புதிதாக ஒருவரைப் பார்க்கும்போது சற்று பயம், பதற்றம் இருக்கும். அதுவும் அமைச்சர் வருகிறார் என்று அந்த மாணவிக்குத் தெரிந்திருக்கும் என்ற பட்சத்தில் கேள்விக்கு பதில் தெரிந்தாலும் அந்த மாணவி பயம் காரணமாகவும் சொல்லாமல் இருக்கலாம். ஆசிரியர் கேள்வி எழுப்பும்போது அந்த குழந்தை பதில் சொன்னது இங்கு கவனிக்கத் தக்கது. அப்படி இருக்க அமைச்சர் அந்த அணுகுமுறையில் கேள்வி எழுப்பியது சரியல்ல என்றே பலரும் கூறி வருகின்றனர்.

அதேபோல வகுப்பில் கடைசி வரிசையில் இருக்கும் மாணவர்களைத் தரம் குறைத்துப் பார்க்கும் வகையில் இருப்பதாக அமைச்சரின் ஆய்வு பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ரீல்ஸ் மோகத்துக்காக இவ்வாறு விடியோ எடுத்து அரசுப் பள்ளியைத் தரம் குறைத்துக் காட்டுவதாக அமைச்சர் கீர்த்தனா மீது எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் கீர்த்தனா, "நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்" என்று அரசுப் பள்ளியில் தான் பயின்றதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் பேசிய ஒரு விடியோவைப் பகிர்ந்து, 'அமைச்சர் ஆங்கிலத்தில் பேசியதில் இலக்கணப் பிழை (Grammar) உள்ளது' என்று கூறி பலரும் விமர்சித்து வருகிறார்கள். 'உங்களுக்கே ஆங்கிலம் தெரியவில்லை, அரசுப் பள்ளி மாணவியை சோதிப்பதா?' என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கும் பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கல்வியாளர்களின் கேள்விகளும் விமர்சனங்களும்

அரசுப் பள்ளிகளின் தரம் குறித்த அமைச்சரின் தொடர் பதிவும் பள்ளியில் மேற்கொண்ட ஆய்வும் கல்வியாளர்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பள்ளிக் கல்வித் துறைக்கு என்று அமைச்சர் இருக்கும்போது அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்வது ஏன்? தொகுதி அமைச்சர் என்றாலும் வகுப்பறைக்கு கேமராவுடன் சென்றது மட்டுமின்றி மாணவிகளுடனான உரையாடலைப் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்?

அந்த விடியோ வெளியானால் மாணவியின் மனநிலை என்னவாக இருக்கும்? அரசுப் பள்ளியின் தரம் குறித்து கேள்வி எழும் என்பது கூடவா ஒரு அமைச்சருக்குத் தெரியாது? கடைசி வரிசை மாணவிகளைத் தரம் குறைக்கும் வகையில் பேசியது ஏன்?" என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், அரசுப் பள்ளிகளுக்குள் கேமராவுடன் செல்ல தடை விதிக்க வேண்டும், இதுபோன்ற தேவையற்ற ஆய்வுகளைத் தவிர்க்க வேண்டும், ஆசிரியர்களின் மதிப்பையும் குறைக்கும் விதத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் நடந்துகொள்ளக் கூடாது என்றும் கோரிக்கைகள் வலுக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்யும் அமைச்சர், பள்ளிகளின் தரத்தை கேள்வி எழுப்புவதோடு நில்லாமல், அரசுப்பள்ளி மாணவிகளின் சாதனைகளையும் தெரிந்துகொள்ளுங்கள் என்று பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். திமுக அரசில் படிப்படியாக அரசுப் பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகவும் அவர் பேரவையில் பேசிய காணொலி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இதேபோல நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் தாங்கள் அரசுப்பள்ளியில் படித்த அனுபவத்தையும் தங்கள் பள்ளி எப்படி இருந்தது என்பது பற்றியும் பதிவிட்டு வருகிறார்கள்.

பல பள்ளிகளில் சுகாதாரக் குறைவு, ஆசிரியர்கள் பற்றாக்குறை என பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் அரசுப் பள்ளியிலும் ஓரளவு ஆங்கிலப் புலமை பெற்று இன்று நல்ல நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள். அவர்களும் அந்த மாணவியின் மனநிலை அறிந்து அமைச்சர் கீர்த்தனாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

'மொழி என்பது ஒருவர் பேசும்போது மற்றவர் புரிந்துகொண்டால் போதுமானது. அந்த மொழியில் புலமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என்றும் கருத்துகள் வருகின்றன.

ஒரு குழந்தைக்கு ஒரு மொழியோ, ஒரு விஷயமோ தெரியவில்லை என்றால் அவரின் தன்னம்பிக்கை குறையும் வகையில் பேசுவது சரியல்ல, தெரியாத விஷயத்தை அந்த குழந்தை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில் பேச வேண்டும். அதுவே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

அரசுப் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வசதிகளுடன் நல்ல பயிற்சியும் வழங்கப்பட்டு, அதேபோல அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சரியான பயிற்சி (ஆங்கிலமும்) வழங்கப்பட்ட பிறகு அமைச்சர் சென்று இதுபோன்ற கேள்வியைக் கேட்கலாம் என்பதும் கல்வியாளர்களின் கருத்து.

மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று இதுபற்றி பேசுகையில், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு தேவையற்ற ஆய்வுகள் எதுவும் செய்யக் கூடாது என முதல்வர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளதாகவும், அமைச்சர் தன்னுடைய தொகுதி என்பதால் ஆய்வு செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வு குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் பள்ளிக்கல்வித் துறைக்கென்று அமைச்சராக உள்ள ராஜ்மோகன், ஏன் இன்னும் மௌனம் காக்கிறார்? என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

துறைரீதியாக இல்லாத அமைச்சர்கள், அதிகாரிகள், இவ்வாறு பள்ளிகளுக்குள் புகுந்து - குறிப்பாக இதுபோல மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனைப் பரிசோதிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

summary

Minister Keerthana has faced severe backlash from controversial inspection at a government school

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments