தீபாவளியை முன்னிட்டு சென்னையில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு!
தீபாவளியை ஒட்டி விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று வரும் ஆசையிலிருந்த சென்னைவாசிகளிடையே பேருந்துக் கட்டணங்களில் ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
தீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் திடீரென இரு மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து சென்னை - கோவை, சென்னை - நாகர்கோவில், சென்னை - சேலம், சென்னை - மதுரை, சென்னை - திண்டுக்கல் உள்ளிட்ட முக்கியமான நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் தீபாவளியை ஒட்டி திடீரென இப்படி உயர்த்தப் பட்டது பயணிகளிடையே மிகுந்த அவஸ்தையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திண்டுக்கல் செல்லும் நான் ஏ.சி பேருந்த்துக்கான கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.450 ஆக இருந்தது, தீபாவளியை ஒட்டி ரூ.790 ஆக உயர்வு. இதே விதத்தில் சென்னை - நாகர்கோவில் செல்லும் படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி ஆம்னி பேருந்துக்கான கட்டணம் ரூ.1200 ஆக உயர்வு. சென்னை - கோவை செல்லும் நான் ஏ.சி ஆம்னி பேருந்துக்கான கட்டணமும் ரூ.650 லிருந்து ரூ.990 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஆம்னி பேருந்துக்கான கட்டணமும் இதே விகிதத்தில் ரூ.600 லிருந்து 950 ஆக உயர்ந்துள்ளது.
தீபாவளியை ஒட்டி விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று வரும் ஆசையிலிருந்த சென்னைவாசிகளிடையே பேருந்துக் கட்டணங்களில் ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் தீபாவளியை முன்னிட்டு பேருந்துக் கட்டணங்கள் இப்படி திடீர், திடீரென உயர்த்தப்படுவது சொந்த ஊர் சென்று திரும்பும் ஆசையிலிருக்கும் பொதுமக்களிடையே மிகுந்த அயர்ச்சியையும், அதிருப்தியையும் உண்டாக்கி மறைவது குறிப்பிடத்தக்கது.