தற்போதைய செய்திகள்

குழந்தைகளுடன் தவித்த மாற்றுத்திறனாளி பெண்: ஆதரவுக்கரம் நீட்டிய தன்னார்வலர்

DIN

ஈரோடு: ஈரோட்டில் தங்க இடமில்லாமல் சாலையோரத்தில் குழந்தைகளுடன் தஞ்சமடைந்த பார்வைக் குறைபாடுடைய பெண்ணைத் தன்னார்வலர் ஒருவர் மீட்டு,  ஆதரவற்றோர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைத்துள்ளார்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதைப்போல் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்,   மகன், மகளுடன் வாழ்வதற்கு வழி தெரியாமல் தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கலைவாணி (36). இவருக்கு இடது கண் பார்வை தெரியாது. இவரது கணவர் குணசேகர் இவரும் பார்வைக் குறைபாடுடையவர்.  இவர்களுக்கு 6 வயதில் தமிழ்மகன் என்ற ஆண் குழந்தை, இரண்டு வயதில் மகாலெட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளனர். இருவரும் பேருந்து நிலையம், ரயில்களில் குழந்தைளுக்கான விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். 

கலைவாணி தனது கணவர், குழந்தைகளுடன்  ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.  வீட்டிற்கான வாடகை கொடுக்க முடியாததால் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டைக் காலி செய்துவிட்டு இரவு நேரத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில் தங்கிக்கொண்டு பகலில் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பொது முடக்கத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாயைப் பார்க்கச் சென்ற குணசேகர், போக்குவரத்து இல்லாததால் வெள்ளோடு திரும்பிவர முடியவில்லை.

வேலை இல்லாத நிலையில்,  பாதுகாப்பு கருதி கலைவாணி தனது குழந்தைகளுடன் பவானியில் உள்ள பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் நீண்ட நாள்கள் இங்கு தங்கக் கூடாது என இரண்டு நாட்களுக்கு முன்பு கலைவாணியை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார். இதனால் குழந்தைகளுடன் ஈரோடு வந்த கலைவாணி வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஒரு பெண் மாற்றுத்திறனாளி வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நெருக்கடியான சூழலில் அவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என கருதிய கலைவாணி ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தைகளை அழைத்துக்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் நடந்து சென்றுள்ளார்.  குழந்தைகளுடன் நடந்து செல்வதைப் பார்த்த சிலர் கலைவாணியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் தன் குடும்ப சூழல் குறித்து கூறியுள்ளார்.

அங்கிருந்த மக்கள் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் உணர்வுகள் என்ற தன்னார்வ அமைப்பின் தலைவருமான மக்கள் ராஜனிடம் விவரத்தை கூறி உதவக் கேட்டுக்கொண்டனர். மாநகராட்சி ஆணையர்  எம்.இளங்கோவனிடம் அனுமதிபெற்று,  கலைவாணி மற்றும் குழந்தைகளை தனது காரில் அழைத்துச் சென்று, ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ள ஜீவிதம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கருங்கல்பாளையம், காவிரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்தார்.

தாய், மகனுக்கு வலிப்பு நோய் பாதிப்பு: கலைவாணிக்கும் மகனுக்கும் வலிப்பு நோய் இருப்பதாகவும்,  இந்த நோய் குணமாக மூன்று ஆண்டுகள் வரை தொடர் சிகிச்சை தேவை, முதற்கட்ட பரிசோதனைக்கு ரூ. 30,000 வரை செலவாகும் என்றும், தொடர் சிகிச்சைக்கு மாதம் ரூ.10,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் கிடைக்கும் வருவாய் மூன்று வேளை உணவுக்குக்கூட போதுமானதாக இல்லை. வாடகை கொடுக்க முடியாமல் வீட்டைக் காலி செய்துவிட்டு இரண்டு மாதங்களாக ரயில் நிலையத்தில் தங்கி இருந்தோம். இந்த நிலையில் எவ்வாறு சிகிச்சைக்கு செலவு செய்வது என்கிறார் கலைவாணி.

இதுகுறித்து உணர்வுகள் தன்னார்வ அமைப்பின் தலைவர் மக்கள் ராஜன் கூறியதாவது: கரோனா பொது முடக்கம் காலத்தில் ஏராளமானோர் ஏழை மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் வீடு, மூன்று வேளை உணவு, குழந்தைக்கு கல்வி,  சிகிச்சை என எந்த வசதியும் இல்லாத கலைவாணியின் குடும்பத்தினருக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளோம். இந்த குடும்பத்துக்கு உதவ முன்வருபவர்கள் 9364220201 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

பள்ளி மாணவா்களுக்கு மே 1 முதல் கோடை கால பயிற்சி முகாம்

தேநீா்க் கடையை சேதப்படுத்திய இருவா் கைது

SCROLL FOR NEXT