ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் கிராமத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்து பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இதில், பங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு உயிரிழந்தனர். காயமடைந்த பொதுமக்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.
இந்த நிலையில், இரண்டு வீரர்கள் வீர மரணத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக், கோகர்நாக் ஆகிய இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்களை இழந்துள்ளது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பத்தில் வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் நாடு அவர்களுடன் உறுதியாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.