‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: தில்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தில்லியில் புதன்கிழமை மாலை (ஜூன் 5) நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானத்தில் தில்லி புறப்பட்டார்.
சென்னை: தில்லியில் புதன்கிழமை மாலை (ஜூன் 5) நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டார்.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையிலும், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது.
அதே நேரம், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கடந்த தோ்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.
நாட்டிலேயே அதிபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வென்றுள்ளது இந்த தோ்தலில் திருப்புமுனையான விஷயம். கடந்த தோ்தலுடன் ஒப்பிடும்போது இந்த முறை பாஜக வென்றுள்ள இடங்களில் கூட குறைந்த வாக்கு வித்தியாசம்தான் உள்ளது.
இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க கூட்டணிக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கே வீட்டில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின். சாமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க கூட்டணிக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டார்.
இந்த கூட்டத்தில் புதிய ஆட்சி அமைப்பது, வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், கூட்டணிக் கட்சித் தலைவா்களுடனான ஆலோசனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.