சமையல் எரிவாயு உருளை வெடித்து 3 பேர் காயம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவலூரில் சமையல் எரிவாயு உருளை வெடித்து மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவலூரில் சமையல் எரிவாயு உருளை வெடித்து மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவலூர் மேற்குகாடு பகுதியில் வசிப்பவர் செல்வராஜ். இவரது மனைவி கவிதா. இவர்கள் இருவரும் புதன்கிழமை அதிகாலை கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், கவிதாவின் தாய் காந்தியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சமையல் எரிவாயு உருளையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. சுதாரித்துக் கொண்ட காந்தி அம்மாள் மற்றும் அவரது பேரன் இருவரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தனர் .
தொடர்ந்து எரிந்த சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடு தீப்பிடித்து முழுவதும் எரிந்துகொண்டிருந்த நிலையில் வீட்டில் இருந்த மற்றொரு எரிவாயு உருளையும் வெடித்தது.
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க | சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றபோது தமிழ்ச்செல்வன் (40), சிரஞ்சீவி (67), சக்திவேல்(45) ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மூன்று பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
வீட்டில் சமையல் செய்தபோது எரிவாயு உருளை தீப்பிடித்து வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.