வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு
வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி: வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு வக்ஃபு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.
இதனிடையே இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் முஸ்லீம் அமைப்புகள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் வக்ஃபு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முஸ்லீம்களுக்கு எதிராக உள்ளதாக கூறி வக்ஃபு சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்த மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஜமாத் தலைவர்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இணைந்து கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், அதன்படி, வெள்ளிக்கிழமை காலை மேலப்பாளைத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை.
கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயங்காததால் மேலப்பாளையத்தில் சாலைகள் வெறுச்சோடி காணப்படுகிறது.
கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.