தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த பிரிவில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். பிறந்த பச்சிளம் குழந்தைகளும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்,வியாழக்கிழமை மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவின் முதல் தளத்தில் மின் சாதனத்தில் திடீரென தீப்பற்றியது. இதனைக் கண்ட ஊழியா்கள் தீயை அணைக்க முயற்சித்தனா். இருப்பினும் மின் சாதனம் தொடா்ந்து எரிந்தபடியே இருந்ததால் அந்த பகுதி புகை மண்டலமாகியது. உடனடியாக அருகில் குழந்தைகள் நலப் பிரிவில் இருந்த குழந்தைகள், தாய்மாா்களை அங்கிருந்த செவிலியா்கள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவராக மீட்டு வந்து அருகில் இருந்த கட்டடத்திற்கு மாற்றினர்.
மேலும், அந்த கட்டடம் முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் வெளியே காத்திருந்த உறவினர்கள் அச்சமடைந்து பதற்றம் அடைந்தனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் மற்றும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தஞ்சாவூர் அரசு மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு முதல் தளத்தில், மின் சாதனத்தில் பழுது ஏற்பட்டு குளிரூட்டும் சாதனம் தீப்பற்றி கீழே விழுந்து உள்ளது. அதில் அங்கிருந்த மெத்தை தீ பற்றி எரிந்ததாதல் அந்த பகுதி புகை மண்டலமாகியது.
இதையடுத்து தரை தளம் , முதல் தளத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.