பந்தநல்லூர் அருகே இடுகாட்டில் புதைக்கப்பட்ட பள்ளி மாணவியின் உடல் மாயமானது வதந்தி என தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (48), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேகலா (33). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது இரண்டாவது மகள் தர்ஷிகா (12) பந்தநல்லூர் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை சிறுமி உயிரிழந்துள்ளார்.
அவரது, உடல் நேற்று அவரது குடும்பத்தினரின் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மண்ணியாறு இடுகாட்டில் புதைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை இடுகாடு வழியாக வந்த சிலர் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் 3 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அரசடி கிராம மக்கள் இடுகாட்டில் வந்து பார்த்தபோது சிறுமியின் உடை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. எனவே அவரது உடல் உள்ளே உள்ளதா அல்லது தோண்டி அடுத்த சென்று விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் மேலும் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். தோண்டியதில் சிறுமியின் உடல் அங்கு இருந்தது.
இதையடுத்து உறவினர்கள் உடலை எப்படி புதைத்தார்களோ அதே மாதிரி இருந்தாதால் உடலை மேற்கொண்டு எடுக்க வேண்டாம். உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உறவினர்களிடம் அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டு உடலை மண்ணை போட்டு மூடினர்.
மேலும், இனிமேல் இதுபோல் சம்பவம் நடைபெற கூடாது எனவும், சிறுமி உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மண்ணை தோண்டியவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.