2025 ஆம் ஆண்டில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏஐ போன்ற பல செயற்கை அதிசியங்கள் அபார வளர்ச்சியடைந்து உலகின் தொழில்நுட்பத் திறனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. இருப்பினும், கணிக்கமுடியாத இயற்கை இருவரில் யார் பெரியவர் என்பதை ஆண்டுதோறும் தவறாமல் காண்பித்து மனித பலத்தை முறியடித்து செல்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.
நிகழாண்டு துவங்கியது முதல் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்தில் சிக்கின. மேகவெடிப்புகள், நிலநடுக்கங்கள், வெள்ளம் என இயற்கையின் வகைவகையான தாக்குதல்களில் சிக்கி மீண்டு எழுவதற்குள் இவ்வாண்டு நிறைவை எட்டியுள்ளது. எனவே, 2025 ஆம் ஆண்டு நம்மைச் சுற்றிலும் ஏற்பட்ட சில முக்கிய பேரிடர்களைப் பற்றி இங்கே காண்போம்!
காட்டுத் தீ
கலிஃபோர்னியா காட்டுத் தீ!
2025 ஆம் ஆண்டு துவங்கியதும் மிகப் பெரிய பேரிடராக உருவானது இந்த காட்டுத் தீ. அதுவும், பேட்டக்காரனயே அடிச்சிட்டாங்கப்பா எனும் வசனதுக்கு ஏற்ப வல்லரசுகளின் தலையாக அறியப்படும் அமெரிக்காதான் இந்தப் பேரிடரைச் சந்தித்தது.
முதல் மாதமான ஜனவரியின் 7 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை கலிஃபோர்னியா மாகாணத்தின் காய்ந்த மரக்காடுகள் மற்றும் வறண்ட நிலங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது. தொடர்ந்து வீசிய பலத்த காற்றால் வேகமாகப் பரவிய இந்த காட்டுத் தீ முக்கிய நகரமான லாஸ் ஏஞ்சலீஸை முடக்கியது. இந்தக் காட்டுத் தீயால், லட்சக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். சுமார் 3,000 ஏக்கர் நிலப்பரப்பு காட்டுத் தீயில் எரிந்து நாசமானதுடன், 10,000-க்கும் அதிகமான வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் தீக்கிரையாகின.
இதில், கலிஃபோர்னியா நகரம் காட்டுத் தீயில் எரிந்துகொண்டிருந்த வேளையில், டொனால்ட் டிரம்ப் 2 ஆவது முறையாக ஜன.20 அன்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். பதவிக்கு வந்தவுடன் கலிஃபோர்னியா காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் சவாலை அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் சந்தித்தது. ஆனால், டிரம்ப்பின் ஆட்சி அமைந்தவுடன் காட்டுத் தீ வேகமாகப் பரவுவதாகவும், இதுவொரு கெட்ட சகுணம் எனவும் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்தப் பேரிடரால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுமார் 441 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. ஆனால், உயிர்ப் பலியின் எண்ணிக்கை 31 என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயால் எரிந்தது கலிஃபோர்னியா மட்டும்தான். ஆனால், இந்தப் பேரிடர் உலகம் முழுவதிலும் ஹாட் டாப்பிக் ஆக மாறியது.
தென் கொரியா காட்டுத் தீ!
தென் கொரியாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் நிலவிய வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றால் மார்ச் 21 ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயானது, அடுத்த சில வாரங்களுக்குத் தொடர்ந்து பரவியது. இந்தக் காட்டுத் தீ உருவாக இயற்கையான காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், அப்பகுதிகளில் அமைந்துள்ள குடும்பக் கல்லறைகளில் சடங்குகளை மேற்கொள்ள சிலர் கொளுத்திய தீப்பந்தம்தான் இப்படி கொளுந்து விட்டு எரிந்தது என்றும் சிலரால் கூறப்பட்டது.
சுமார் 10,000 தீயணைப்பு வீரர்கள், ஆயிரக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் விமானங்களின் உதவியுடன் போராடி இந்தக் காட்டுத் தீயை அணைத்தனர். இந்தப் பேரிடரில், சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான நிலப்பகுதி தீக்கிரையானது.
உய்சோங் மலைப்பகுதியில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதன் விமானி பலியானார். இதேபோல், டேகு நகரத்தில் பணியில் இருந்த ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கி அதன் விமானியும் பரிதாபமாகப் பலியானார்.
1987 ஆம் ஆண்டு முதலான ஆவணங்களின் அடிப்படையில், தென் கொரியாவின் பயங்கரமான காட்டுத் தீயாக அறியப்படும் இந்தப் பேரிடரில் 32 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. அதில், பெரும்பாலானோர் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும், காட்டுத் தீ ஏற்பட்ட பகுதியில் அமைந்திருந்த 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌன்ஸா கோயில் மற்றும் அரசினால் புதையல்கள் எனக் குறிப்பிடப்பட்ட பழமையான கட்டமைப்புகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
நிலநடுக்கம்!
பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட பாறை அடுக்குகள் அதற்கு பெயர் டெக்டானிக் தகடுகள் (பிளேட்ஸ்). அந்தத் தகடுகளின் மீதுதான் இந்த பூமியின் நிலப்பரப்பு மற்றும் கடல்பரப்பு ஆகியவை அமைந்துள்ளன. இந்த டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு ஒன்று உரசும்போதே பூமியின் மேல்பரப்பில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன.
இந்தப் பேரிடரால், இவ்வாண்டில் உலகின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகளால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையிலும், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. ஆனால், உள்நாட்டுப் போராலும் கிளர்ச்சியாலும் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள மியான்மர், ஆப்கானிஸ்தான் நாடுகள் நிலநடுக்கத்தில் சிக்கியபோது அதற்கு விலையாகவும் விளைவாகவும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோகின.
திபெத்திய நிலநடுக்கம்!
ரிக்டர் : 7.1
சீனாவின் தன்னாட்சிப் பகுதியாக அறியப்படும் திபெத்தில்தான், 2025 ஆம் ஆண்டில் உலகின் முதல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நேபாள நாட்டின் எல்லையில் அமைந்துள்ள திபெத்தின் திங்கிரி பகுதியில் நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால், 27,000-க்கும் அதிகமான கட்டடங்கள் மற்றும் 3,600-க்கும் அதிகமான வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால், நேபாளத்திலுள்ள எவரஸ்ட் மலையின் அடிவாரத்தில் பனிப்புயல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்துடன், பிகார் மாநிலத்தின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் உள்ள சில வீடுகள் நிலநடுக்க அதிர்வுகளால் சேதமடைந்த செய்திகளும் வெளியாகின.
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி 126 பேர் பலியானதாக சீன அரசு அறிவித்தது. ஆனால், உண்மையான பலி எண்ணிக்கை 265 என உள்ளூர்வாசிகள் தெரிவித்தது சீன அரசை விமர்சனத்திற்குள்ளாக்கியது.
மீட்புப் பணிகள் தொடங்கியதும், மாயமானவர்களின் எண்ணிக்கையை சீன அரசு வெளியிட மறுத்தது. இதன்விளைவாக, எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பது தெரியாமல் மீட்புப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது. அதனால், மீட்கப்படாமல் இடிபாடுகளில் சிக்கி கடும் குளிரினால் பலர் உயிரிழந்தது துயரத்தின் உச்சம்!
மியான்மர் மற்றும் தாய்லாந்து நிலநடுக்கம்
ரிக்டர் : 7.7
ராணுவ அரசின் கட்டுப்பாட்டில், உள்நாட்டுப் போர் பாதிப்பில் அல்லல்பட்டு வரும் மியான்மர் நாட்டுக்கு கடந்த ஆண்டுகளை விட 2025 மிகவும் கோரமான ஒன்றாகவே அமைந்தது என்று சொல்லலாம். எப்போதும், மனிதனின் அனைத்து அட்டூழியங்களையும் தாங்கிக் கொண்டு வந்த மியான்மரின் நிலப்பரப்பு மார்ச் 28 ஆம் தேதி அதன் பொறுமையை இழந்தது.
மியான்மரின் 2 ஆவது மிகப் பெரிய நகரமான மண்டலாயில், மார்ச் 28 பிற்பகலில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், அண்டை நாடான தாய்லாந்தையும் கடுமையாகப் பாதித்தது.
மியான்மரில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்தப் பேரிடரில் இருந்து மீள்வதற்கும் பலியானவர்களின் எண்ணிக்கைகளை கண்டறிவதற்கும் ராணுவ அரசுக்கு சில வாரங்கள் தேவைப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் சுமார் 3,600-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையான பலி எண்ணிக்கை 5,000-ஐ கடந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்தப் பேரிடர் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் ஏற்பட்டதால், வழக்கமாக அன்று நடைபெறும் சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்க மசூதிகளில் திரண்டிருந்த 700-க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் கட்டப்பட்டு வந்த அரசுக்கு சொந்தமான வானுயர கட்டடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. ஏராளமான கட்டடங்கள் நிலநடுக்கத்தில் குலுங்கிய விடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரை அச்சத்தில் உறையவைத்தன. தாய்லாந்தில் மட்டும் 103 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால், மியான்மரின் பழமையான புத்த கோயில்கள் மற்றும் லட்சக்கணக்கான வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமாகின. மேலும், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக, உடனடியாக உள்நாட்டு ஜனநாயகப் படைகளுடன் நடைபெற்று வந்த போருக்கு ராணுவ அரசு போர்நிறுத்தம் அறிவித்தது.
இந்தியாவின் சார்பில், நூற்றுக்கணக்கான டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டதுடன், மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் மியான்மர் சென்றன. நிலநடுக்கத்தில், வீடுகளையும் தங்குமிடங்களையும் இழந்து முகாம்களில் தங்கிய லட்சக்கணக்கான மியான்மர் நாட்டு மக்களில் சிலர், இதுவரை தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை என வருந்துகின்றனர். இத்துடன், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் விளைவாக, ஏப்ரல் மாதத்திற்குள் 460-க்கும் அதிகமான பின்அதிர்வுகள் உண்டானதாக, தாய்லாந்தின் வானிலை அமைப்பும் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
ரிக்டர்: 6.0
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறின. இதையடுத்து, உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தலிபான்களின் தலைமையிலான அரசு அமைந்து 2025 ஆம் ஆண்டுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனைப் பெரியதாகக் கொண்டாடிய தலிபான் அரசும், ஆப்கன் மக்களும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைக் கோரி வருகின்றனர்.
இத்தகையச் சூழலில், ஆகஸ்ட் மாதம் 31 அன்று ஆப்கனில் குணார் மாகாணத்தின் நுர்கால் மாவட்டத்தை மையமாகக் கொண்டு இரவு 11.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவான நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சில நிமிடங்களில் இடிந்து தரைமட்டமாகின.
இந்தப் பேரிடரில், சுமார் 2,200-க்கும் அதிகமானோர் தங்களது இன்னுயிரை இழந்தனர். 4,000-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர். பல ஆண்டுகளாக, உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் மேம்படுத்தப்படாத கட்டமைப்புகளால் இந்தப் பேரிடரின் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே சென்றன.
உரிய நேரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தலிபான் அரசு திணறியது. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டினாலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும், பலியானவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்கும் நீண்ட நாள்கள் தேவைப்பட்டன. இத்துடன், நிலநடுக்கத்தில் சிக்கிய சில மலைக்கிராமங்களின் பாதைகள் முடங்கியதாலும், தடைகளைக் கடந்து அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் அளவிலான கட்டமைப்புகள் இல்லாததாலும், படுகாயமடைந்து சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.
ரஷியா நிலநடுக்கம்!
ரிக்டர்: 8.8
2025 ஆம் ஆண்டில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஜூலை 29 ஆம் தேதியன்று ரஷியா எதிர்கொண்டது. இந்தப் பேரிடரில் ஒருவர் பலியானதாக, ரஷிய அரசு அறிவித்தது.
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தின் அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஜூலை 29 ஆன்று இரவு 11.24 மணியளவில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், கம்சாட்கா தீபகற்ப பகுதி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள குரில் தீவுகள் அதிர்வுகளால் பாதிக்கப்பட்டன. மேலும், 4 பேர் படுகாயமடைந்ததுடன், ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ரஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பசிபிக் பெருங்கடலையொட்டியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில இடங்களில் 3 அடி உயரமுள்ள சிறியளவிலான அலைகள் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு!
தொடர் கனமழையால் நிலத்தின் மீது அமைந்துள்ள இயற்கை மற்றும் செயற்கை நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உடைந்து நிலத்தை நீரால் மூழ்கடிப்பதை வெள்ளம் என்றழைப்பார்கள். இதேபோல், மலைகள் குன்றுகள் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மண்ணரிப்புகள் நிலச்சரிவுக்குக் காரணமாக அமைகின்றன.
இவ்வகை பேரிடர்கள், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஒன்றும் புதியதல்ல. 2025 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வியத்நாம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் வெள்ளத்தில் மூழ்கியே கரையேறின.
இந்தியா - பாகிஸ்தான் வெள்ளம்!
இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ள ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹிமாசலப் பிரதேசத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் அளவு கடந்து பெய்த கனமழையால் இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி அண்டை நாடான பாகிஸ்தானும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்தாவரில் கடந்த ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு பயங்கர கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளத்தில் அங்கு அமைந்துள்ள மச்சாலி மாதா கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்கள் உள்பட 68 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் களத்தில் இறங்கி பேரிடரில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டன.
தொடர்ந்து நிகழ்ந்த மேகவெடிப்புகள் மற்றும் அதனால் பெய்த கனமழையால் ஜம்மு - காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் தாவி நதியின் மீது அமைந்துள்ள அணைகள் திறக்கப்படும் என அறிவித்து, பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது.
இந்தியாவில் இருந்து திறந்து விடப்பட்ட அணைகள் மற்றும் பாகிஸ்தானில் பெய்த கனமழையால் நிரம்பிய நீர்நிலைகளால் பஞ்சாப் மாகாணம் அடுத்த சில நாள்களுக்கு வெள்ளக்காடாக மாறியது.
இந்த வெள்ளத்தால், பஞ்சாப் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் இருந்து சுமார் 1,25,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பஞ்சாபின் வெள்ளத்தால் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பஞ்சாபில் மட்டும் சுமார் 70-க்கும் அதிகமான மக்கள் பலியானது உறுதி செய்யப்பட்டது.
இத்துடன், கைபர் பக்துன்குவா, சிந்து, பலூசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர்.
பஞ்சாப் வெள்ளம்!
இதேவேளையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் போன்ற பகுதிகளில் பெய்த கனமழையால் பாகிஸ்தானின் பஞ்சாப் மட்டுமின்றி இந்தியாவின் பஞ்சாப் மாநிலமும் வெள்ளத்தில் தத்தளித்தது.
பஞ்சாபின் குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், ஃபெரோஸ்பூர், பதான்கோட், கபூர்தலா மற்றும் ஃபாசில்கா போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பஞ்சாபின் 3,100-க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், 3 லட்சத்திற்கும் அதிகமான விளைநிலங்கள் வெள்ளநீரில் நாசமாகின.
இதனால், வெள்ளத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகளுடன், தன்னார்வலக் குழுக்களும் ஈடுபட்டன. சுமார் 29 பேர் வெள்ளம் மற்றும் அதனால் உருவான பாதிப்புகளால் பலியாகினர்.
இலங்கையை புரட்டிய “டிட்வா”
இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் உருவான டிட்வா புயல், இலங்கை எனும் ஒரு சிறிய தீவுநாட்டை முழுவதுமாக நீருக்குள்ளும், நிலத்துக்குள்ளும் புதைக்க முயன்றது, 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரிடர்களில் ஒன்றாகவே இது அமைந்தது.
நவம்பர் மாதத்தின் இறுதி வாரம், சரியாகச் சொன்னால் 26 ஆம் தேதி இலங்கையின் கடல் பகுதியில் உருவான ‘டிட்வா புயல்’, அடுத்த சில நாள்களில் இலங்கையின் பல்வேறு மாகாணங்களை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் புரட்டிப்போட்டுச் சென்றது. 2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு இலங்கையைத் தாக்கிய மிகப் பெரிய பேரிடராக இது கருதப்படுகிறது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையின் 6,200-க்கும் அதிகமான வீடுகள் உள்பட 96,500-க்கும் அதிகமான கட்டமைப்புகள் பலத்த சேதங்களைச் சந்தித்தன. இந்தப் பேரிடரால், 644 பேர் பலியானதுடன், சுமார் 200 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், லட்சக்கணக்கான கால்நடைகள் பலியாகின.
இலங்கையை உருக்குலைத்த இந்தப் பேரிடரில், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் மின்சார கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால், சில நாள்களுக்கு இலங்கையின் 30 சதவிகித பகுதிகள் மின்சாரம் இன்றி இரவுகளில் இருளில் மூழ்கின. நவ.29 ஆம் தேதி காலை இலங்கையை விட்டு வெளியேறி தமிழக மற்றும் புதுச்சேரி கடல்பகுதிகளை நோக்கி டிட்வா புயல் நகரத்துவங்கியது.
உடனடியாக, இலங்கையின் மக்களை மீட்பதற்காகவும், சீரமைப்புப் பணிகளைத் துவங்குவதற்காகவும் அந்நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக, அதிபர் அநுர குமார திசநாயக அறிவித்தார்.
இந்தப் பேரிடரில் இருந்து முழுமையாக இலங்கை மக்கள் மீள்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும் எனக் கருதப்படுகிறது. பேரிடரால், தவித்து நின்ற இலங்கைக்கு தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு உதவிக் கரம் நீட்டின. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் சார்பில் டன் கணக்கில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மீட்புப் பணிகளில் உதவுவதற்காக, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்களும், நிவாரணப் பொருள்களை விநியோகிக்க விமானப் படை விமானங்களும் இலங்கைக்குப் பறந்தன.
சென்யார் புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு!
டிட்வா இலங்கையைத் தாக்கிய அதே நேரத்தில் வடமேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் நவம்பரின் இறுதி நாள்களில் உருவான சென்யார் புயல், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் கடும் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.
நவ.26 சென்யார் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால், தாய்லாந்தின் மத்திய, தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 20 மாகாணங்களிலும், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலும் வெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தாய்லாந்தில், 36 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்யார் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர். 297 பேர் பலியானதாக அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டாலும், அசல் எண்ணிக்கை 1,000-க்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. லட்சக்கணக்கான வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கியதால் தங்குமிடமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளிலும் பொது வெளிகளிலும் தஞ்சமடைந்த விடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரைக் கலங்கச் செய்தன.
வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின், பேரிடருக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக அரசு மேற்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கத் தவறி விட்டதாகக் கூறி தாய்லாந்தின் பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.
இந்த சென்யார் புயல், மலாய் பகுதிகளுடன் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை முழுவதுமாகப் புரட்டிப்போட்டுச் சென்றது. சுமத்ராவின் மேற்கு, வடக்கு சுமத்ரா மற்றும் ஆச்சே மாகாணங்கள் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளைச் சந்தித்தன. சுமார் 11 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டனர்.
லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்யார் புயல் அதன் ஆட்டத்தை முடித்து கரையைக் கடந்தபோது இந்த மூன்று மாகாணங்களில் மட்டும் 1,090 பேர் பலியானதுடன், சுமார் 7,000 பேர் படுகாயமடைந்திருந்தனர். நூற்றுக்கும் அதிகமான மக்கள் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இந்தோனேசியாவில், தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யும் அளவில் மாபெரும் பேரிடராக இந்த வெள்ளம் உருவானது.
அழிவின் விளிம்பில் “தபனுலி ஒராங்குட்டான்”
இந்தோனேசியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறியப்படும் தபனுலி ஒராங்குட்டான் ரக குரங்குகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியாகின. 800-க்கும் குறைவான தபனுலி ஒராங்குட்டான் குரங்குகள் மட்டுமே தற்போது உயிரோடு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில், 8-9 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இனப் பெருக்கம் செய்யும் இந்த அரிய வகைக் குரங்குகளைப் பாதுகாக்கும் சவாலானது மேலும் அதிகரித்துள்ளது.
இவை மட்டுமின்றி, இந்தப் பட்டியலில் சேர்க்கப்படாத பல இயற்கை பேரிடர்களை பல்வேறு நாடுகள் 2025 ஆம் ஆண்டில் சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான மனித உயிர்களும், கால்நடைகளும் பலியாகியுள்ளன.
இயற்கை பேரிடர்கள் என்று பெயரால் மட்டுமே கூறப்பட்டாலும், இந்தப் பேரிடர்களுக்கும் அதனால் உருவான அழிவுகளுக்கும் மனிதன் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்!
கட்டுப்பாடுகளின்றி தொடர்ந்து இயற்கை வளங்களைச் சுரண்டுவது, மாசுப்பாட்டை அதிகரிப்பது போன்ற செயல்களால் நமக்கு அள்ளிக்கொடுத்து வந்த இயற்கை பாதிப்படையாமல் இருப்பதில்லை.
இப்படியான சூழலில், பேராசையில் சுரண்டாதீர்கள் எனும் கொள்கைகளை மறந்து இயற்கை மீது கருணைக் காட்டாத மனிதகுலத்தின் மீது இயற்கையோ அல்லது கடவுளோ மட்டும் கருணைக்காட்டுமா என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.